வயநாடு|“தனித்தனி பாகங்களாக கிடைக்கும் உடல்கள்” - பிரேத பரிசோதனை சவால்கள்.. மருத்துவர் பகிர்ந்த உண்மை
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரில் தலை, கை, கால் உள்ளிட்ட பாகங்கள் இல்லாமலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை கூறாய்வு செய்வது சவாலாகி இருக்கிறது. அந்தப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர் அஜித்துடன், நமது செய்தியாளர் சுதீஷ் நடத்திய நேர்காணல்...
இத்தனை உடல்களை ஒரே இடத்திலும், நேரத்திலும் வைத்து கூறாய்வு செய்வது எப்படிப்பட்ட பணியாக உள்ளது?
கூறாய்வு பணியை கடந்த 30ஆம் தேதி துவங்கினோம். முதலில் குறைவான உடல்கள்தான் வரும் என எண்ணியிருந்தோம். ஆனால், நிலைமை வேறாக உள்ளது. இங்கு வரும் பெரும்பாலான உடல்களில் சிதைவுகள் அதிகமாகவே உள்ளன. குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட பலரின் உடல்களை கூறாய்வு செய்ததில், இறக்கும் முன்பே உடலில் சிதைவு தலைகள் சிதைந்த, பாகங்கள் துண்டிக்கப்பட்ட உடல்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளன. இத்தனை உடல்களை கூறாய்வு செய்ய முடிந்ததற்கு மருத்துவர்கள், மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்புதான் காரணம்.
மொத்தம் எத்தனை மருத்துவர்கள் கூறாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்?
ஆலப்புழா, கோட்டயம் உள்பட எல்லா மாவட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக 24 மணி நேரமும் கூறாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களின் உடல்களை கூறாய்வு செய்வதில் சந்தித்த சவால்கள் என்னென்ன?
உடல்களை அடையாளம் காண்பது மிகப்பெரிய சவால். நிறைய உடல்கள், அடையாளம் காண இயலாதவாறு கோரமாக உள்ளன. அப்படியான உடல்களை உறவினர்களிடம் காட்டும்போது, அவர்கள் பயப்படாத வகையில் முகங்களை சீரமைக்கிறோம்.
தலைகள் அற்ற (அ) முகம் சிதைந்த உடல்களை அடையாளம் கண்டது எப்படி? இதில் DNA சோதனை எப்படி உதவுகிறது ?
பதில் : சிதைந்த உடல்களின் மரபணு மற்றும் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதிக்கிறோம். அவை ஒத்துப்போகும் பட்சத்தில், இறந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்..
இதுவரை எத்தனை உடல்கள் இங்கே கூறாய்வு செய்யப்பட்டுள்ளன?
இதுவரை 168 உடல்களை கூறாய்வு செய்துள்ளோம். அதில், 20 கை, கால்கள் உள்ளிட்ட பாகங்களாகவே கிடைத்துள்ளன.