தூத்துக்குடி: அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சைலுண்குமார் யாதவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அருணா ஜெகதீசன் ஆணையம்
அருணா ஜெகதீசன் ஆணையம் முகநூல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சைலுண்குமார் யாதவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2018 மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டதை தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் 93 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகள் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பரத்வாஜ் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால் அவரின் தாயாருக்கு நிவாரணத்தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார், சரத்கர், ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தவிர ஒரு காவல்ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஒருவர் மீது குற்றவழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு உதவி ஆய்வாளர், இரு இரண்டாம் நிலைக்காவலர், ஒரு முதல்நிலைக்காவலர் மற்றும் ஒரு காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முதல்நிலைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அருணா ஜெகதீசன் ஆணையம்
“சுத்திகிட்டே இருக்கோம்..” - கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம்!

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com