“சுத்திகிட்டே இருக்கோம்..” - கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம்!

புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம்முகநூல்

புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் கட்டப்பட்டது. மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநகரப் பேருந்து நிலையம் இருக்குமிடத்திலிருந்து, பேருந்து முனையம் செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பயணி ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.

அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இடையூறாக இருந்த சுவர் அகற்றம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக இருந்த சுவர், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு மாநகர பேருந்துகள் வந்து செல்லும் இடத்தில் இருந்து வெளியூர் செல்ல இடைஞ்சலாக தடுப்பு சுவர் ஒன்று இருந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு இடையூராக இருக்கும் சுவர் அகற்றப்படும் என உறுதியளித்தார்.

அமைச்சர் சொல்லி அரைமணி நேரத்தில் இடையூராக இருந்து சுவர் அகற்றப்பட்டு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com