செய்தியாளர்: ராஜன்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த முதல் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தமிழகம் முழுவதும் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தவெக மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்திற்கு வருகை தந்த அஜிதா ஆக்னலுக்கு அக்கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்தும், தலையில் கிரீடம் சூட்டியும், ரூபாய் நோட்டுகளை மாலையாகவும் போட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்று இருக்கிறார்கள். ஆண்களை போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுத்திருக்கிறர்கள். அதனால் தளபதியோடு பயணிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி கொடுத்திருக்காங்க. தளபதியோட இந்த மாநாடு மூலம் தளபதியின் நாடாக தமிழ்நாடு அமைய எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்த்துகளையும் தளபதியாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.