”திமுக நஞ்சை விதைக்கிறது”- வானதி சீனிவாசனின் கண்டனமும் திருவாரூர் கல்லூரியின் புதிய சுற்றறிக்கையும்!

சனாதன எதிர்ப்பு குறித்த திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வரின் அறிக்கைக்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்pt web

தமிழ்நாடு அரசியல் களத்தில் சனாதனம் குறித்த விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அமைச்சர் உதயநிதியில் ஆரம்பித்த நெருப்பு இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. திமுக - பாஜக இடையே கருத்து மோதலாக இது தொடர்கிறது. மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் தீவிரமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது இந்தியா கூட்டணியிலும் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால், சனாதம் குறித்த விவாதங்களை தாண்டி பாஜக அரசின் ஊழல் குறித்து பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை விடுத்திருந்தார். திமுகவே சனாதனம் குறித்த விவாதம் போதும் என நினைத்திருந்த நிலையில், தற்போது புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைதான் புதிய விவாதத்திற்கு காரணம்.

அந்த சுற்றறிக்கையில், “இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்புப் பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணியளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையை, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வானதி சீனிவாசன், கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், சனாதனம் குறித்து அரசுக் கல்லூரி மாணாக்கரிடையே திமுக நஞ்சை விதைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் சாசன அமைப்புக்கு எதிராக இல்லையா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் மீண்டும் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், “கல்லூரியில் 12.09.2023 அன்று சனாதனம் குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாணவிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தவறான புரிதலின் காரணமாக மாறுப்பட்ட செய்தி வடிவில் ஊடகங்களில் பரவி வருகிறது. இது யாருக்கும் சாதக பாதகமாக இல்லாமல், நடுநிலையோடு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும்.

இதனை, மேற்காண் தேதியில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக 13.09.2023 அன்று மாற்று சுற்றறிக்கை கல்லூரி மாணவிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவிகள் 12.09.2023 அன்றைய சுற்றறிக்கையின்படி அல்லாமல், தங்களது சொந்த விருப்பத்தின் பேயரிலேயே செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஊடங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானது என மறுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்pt web

சனாதனம் குறித்த விவாதங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளா சூழலில் கல்லூரி ஒன்றில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையும் பேசு பொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com