திருவள்ளூர் | இளைஞரை வெட்டிக் கொலை செய்து முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்
செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள மட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் இருப்பதாக கிராம மக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுதது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு சட்டை பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட நபர், திருவள்ளுார் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ் (19) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த எஸ்பி சீனிவாச பெருமாள் திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், திருவவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.