திருவள்ளூர் | ஏரியில் குளிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த வடக்குநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் (42). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனது தாய் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், வாசுதேவன் அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த பக்கமாக சென்றவர்கள் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு ஆரணி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல் துறையினர், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், வாசுதேவன் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.