திருவள்ளூர் | திடீரென பின்னோக்கிச் சென்ற கார் மோதி விபத்து - மதுபோதையில் கிடந்த தொழிலாளி உயிரிழப்பு
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவி (55). சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில வருடங்களாக சாலை ஓரங்களில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து பிழைத்து நடத்தி வந்தார். தடம்பெரும்பாக்கம் பகுதியில் வழக்கம் போல பழைய பொருட்களை விற்பனை செய்து விட்டு மது போதையில் சாலையோரம் ரவி மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையோர கடையில் இருந்த கார் ஒன்று கவனக்குறைவாக பின்னோக்கி இயக்கிய போது மது போதையில் மயங்கிக் கிடந்த ரவி மீது ஏறி இறங்கியது.. இதில் பலத்த காயமடைந்த ரவியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கூலித் தொழிலாளி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனை சவக்கிடங்கில் வைத்தனர். இதையடுத்து கவனக்குறைவாக காரை இயக்கிய கார் ஓட்டுநர் மணிகண்டனை (26) காவல் துறையினர் கைது செய்தனர். மது போதையில் மயங்கி கிடந்த கூலித் தொழிலாளி மீது கார் ஏறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.