திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. தமிழக அரசு உறுதி - திருமாவளவன் சொன்னது என்ன?
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போதைய திமுக அரசில், புதிய நடைமுறையில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கோரி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு பழைய நடைமுறையிலேயே தீபம் ஏற்றப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு நவம்பர் 20 அன்று, நவம்பர் 24-ல் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், இந்த அனுமதி இந்த ஒரு ஆண்டு மட்டுமே; பொதுமக்கள் மலை உச்சிக்குச் செல்ல அனுமதியில்லை உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. எனினும், இந்த மனு அவரசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தச்சூழலில் தான், உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இன்று (நவம்பர் 23, 2026) விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தன. ஆனால் மதுரை காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் அமைதிப் பேரணியைத்தான் அறிவித்திருந்தோம். இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. இருப்பினும், உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதாகக் கருதுகிறோம். காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரணி நடத்த நாங்கள் முடிவெடுக்கவில்லை. எனவே, கூட்டமைப்பு அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பேசிய அவர், ”உயர்நீதிமன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு மாறாக அமைந்துள்ளன. இருப்பினும், பாரம்பரியமாகவும் வழக்கமாகவும் எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்ததோ, அந்த இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இதுதான் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் நிலைப்பாடும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுமாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய திமுக மற்றும் இன்றைய தவெக அரசுகளின் நிலைபாடும் ஒன்றாகவே உள்ளது. உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே நடைமுறை. புதிய இடத்தில் தீபம் ஏற்றலாம் என்ற அனுமதி ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

