திருப்போரூர்: உண்டியலில் விழுந்த தன் செல்ஃபோனை தானே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த பக்தர்!
சென்னை சிஎம்டிஏ ஊழியரான தினேஷ் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி குடும்பத்தோடு திருப்போரூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். தொடர்ந்து அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும் போது, அவர் வைத்திருந்த ஐஃபோன், தவறுதலாக உண்டியலின் உள்ளே விழுந்துள்ளது. உடனே அது குறித்து கோயில் நிர்வாகத்திடம் தினேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ, “உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் போது தகவல் கொடுக்கிறோம், அப்போது வந்து ஃபோனை பெற்றுக் கொள்ளுங்கள்” என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
பின் 3 மாதங்களுக்கு பிறகு, உண்டியல் திறந்து காணிக்கையை எண்ணும் போது தினேஷின் ஐபோனும் இருந்துள்ளது. உடனடியாக அவருக்கு கோயில் நிர்வாகிகள் தகவல் கொடுக்கவே, 3 மாதங்களுக்கு பிறகு எப்படியேனும் இன்று நம் ஐ-ஃபோன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு கோயிலுக்கு சென்றுள்ளார் தினேஷ்.
விரைந்து கோயிலுக்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம், “என் ஃபோனை சீக்கிரம் கொடுங்க” என கேட்டுள்ளார் தினேஷ். அதற்கு கோயில் நிர்வாகிகள், பாளையத்தம்மன் பட பாணியில் “ஃபோன் கொடுக்க உங்கள கூப்டல, அதுல இருக்க டேட்டாவ மட்டும் எடுத்துட்டு போங்க, உண்டியல்ல விழுந்த எல்லாமே அப்பன் முருகனுக்குதான் சொந்தம்” என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்த தினேஷ், தன் செல்ஃபோனை வழங்கும் படி இந்து சமய அற நிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் பேசு பொருளாகி அரசியல் கட்சியினர் உட்பட பல தரப்பினரும் தினேஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது ஏலத்தில் தன்னுடைய செல்ஃபோனை தானே எடுத்துள்ளார் தினேஷ். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “உண்டியலில் விழுந்த பொருட்களை சட்டப்படி ஏலத்தில் விட வேண்டும் என்ற அடிப்படையில், செல்ஃபோனை ஏலத்தில் விட்டோம். ஏலத்தில் சென்ற அந்த செல்ஃபோனை, அதன் உரிமையாளரே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.