\
Thiruparankundram Hill: Deepam Lit Following Supreme Court Order
மலைத் தூணில் தீபம்Pt web

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் ஏற்றப்பட்டது தீபம்!

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
Published on: 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்ற ஆண்டு மலைத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இந்தச்சூழலில் தான், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு முன்னதாக இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற அனுமதியளித்தது. ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு உடனடி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

இந்தச்சூழலில் தான், கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போல, ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலேயே ஏற்றப்பட்டிருந்தது. இதற்கு, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தச்சூழலில் தான், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தங்கள் உத்தரவை நிறைவேற்றாத திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை, சஸ்பெண்ட் செய்தனர். கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபனை நியமித்தனர். அவர்களை மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற ஆணையிட்டனர். திருப்பரங்குன்றம் கோயிலையும் மலையையும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்று காலை முதல் இந்து அமைப்பினர், பக்தர்கள் உள்ளிட்டோர் கோவில் அருகே குவியத் தொடங்கினர்.

இந்தச்சூழலில் தான், இன்று மாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தூணில் உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றப்பட்டப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Thiruparankundram Hill: Deepam Lit Following Supreme Court Order
தொகுதி மறுவரையறை | திமுக ஆதரவு நிலைப்பாடு.. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும்! ஆதரவும்!