தொகுதி மறுவரையறை | திமுக ஆதரவு நிலைப்பாடு.. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும்! ஆதரவும்!
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 3 காலியிடங்களை தவிர்த்து தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சபாநாயகர் உட்ட 540ஆக உள்ளது. இந்தச்சூழலில் தான், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தும் நோக்கில், தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அரசமைப்பு சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற 3இல் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, 360 வாக்குகள் தேவை.
அந்தவகையில் தான், போதிய பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதா தோல்வியைச் சந்தித்திருந்தது. அப்போது, முதல்வராக இருந்த ஸ்டாலின் இதுதொடர்பான மசோதாவை எரித்தது இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்தது.
இதற்கிடையில் தான், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில், திமுக கூட்டணி முதன்முறையாக தேர்தலைச் சந்தித்த தவெகவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. அதைத்தொடர்ந்து, நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பாஜக தொகுதி மறுவரையறையை கொண்டு வருவதாக பேச்சு எழுந்த நிலையில், அப்போது திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கும் எனக் கூறப்பட்டது. எனினும், அப்போது தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரவில்லை. இந்தச்சூழலில் தான், வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவையின் போது, தொகுதிவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவிருக்கிறது.
இந்தச்சூழலில் தான், இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தற்போது தெரிவித்திருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்யும் மசோதாவுக்கு ஆதரவளிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 லிருந்து 7.21 ஆக உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் பேசுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைவிடவும் திமுகவின் நிலைப்பாடு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது; சங் பரிவார்களின் சதி அரசியலுக்கு திமுக எடுத்துள்ள நிலைப்பாடு துணைபோவதாக உள்ளது. திமுகவின் இந்த நிலைப்பாடு தேசத்துக்கே ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பேசுகையில், எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு திமுக இப்போது ஆதரவு அளிக்கிறது? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்ற என்னவகையான உறுதி மொழியை திமுகவுக்கு பாஜக கொடுத்தது என கூறப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை சிபிஎம் எதிர்த்து வாக்களிக்கவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, திமுகவின் நிலைப்பாட்டை எதிர்த்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு. ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் வேறு பேச்சு என விமர்சித்ததுடன் இது டெல்லி அணியா அல்லது தமிழ்நாடு அணியா என கேள்வி எழுப்பியிருக்கிறது.
2 கோரிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன!!
இந்தச்சூழலில் தான், திமுகவின் நிலைப்பாட்டிற்கு விளக்கமளித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், ”#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டு முதல் திமுக மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசயம், திமுகவின் இந்த முடிவை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு என்பது நாட்டின் நன்மைக்கானது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தந்தது இந்திய அளவில் வரைபடத்தை மாற்றப்போகிறது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தவெகவும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

