“இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் எல்லாத்துக்கும் போராடியிருக்காங்க”-சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம்

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி இரு கட்சிகளுக்கு வாக்களித்ததால் தான் எதுவும் சரியில்லை அனைத்தும் தவறாக சென்றுவிட்டது என சொல்கிறார்கள் என்றால் இந்துக்கள் யாருக்கு வாக்கு செலுத்தி எது தவறானது என்பதையும் பேச வேண்டும்.
thirumurugan gandhi, seeman
thirumurugan gandhi, seemanpt web

இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்றது, அடுத்தடுத்த நாட்களில் நடந்த செய்தியாளர் சந்திப்புகளில், மன்னிப்பு கேட்டால் வாக்களித்து விடுவார்களா என்றதும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை சிறும்பான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என சொன்னது என அவரது பேச்சுகள் அடுத்தடுத்த விவாதங்களை ஏற்படுத்தியது.

இதனிடையே மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களை வாக்காளர்களாக மட்டுமே பார்ப்பது, வாக்காளர்களை மத அடிப்படையில் மட்டுமே பார்ப்பது இரண்டுமே ஜனநாயக விரோதமானது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளின் படி தங்களது வாக்குகளை பதிவு செய்கிறார்கள். தங்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கூடியவர்களுக்கோ அல்லது தங்களுக்கு எதிராக இருக்கும் கட்சிகளுக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளின் அடிப்படையில் தான் தேர்தல்களை அணுகுவது என்பது நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த அளவிற்கு அரசியல் தெரியுமோ புரியுமோ அந்த அளவிற்கு வாக்குகளை செலுத்திக் கொண்டுள்ளார்கள்.

அப்படி இருக்கும்போது தேர்தலை மத அடிப்படையில் ஒவ்வொருவரையும் பிரித்து பேசுவது ஏற்புடையது அல்ல. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி இரு கட்சிகளுக்கு வாக்களித்ததால் தான் எதுவும் சரியில்லை அனைத்தும் தவறாக சென்றுவிட்டது என சொல்கிறார்கள் என்றால் இந்துக்கள் யாருக்கு வாக்கு செலுத்தி எது தவறானது என்பதையும் பேச வேண்டும். வாக்காளர்களை இந்துக்களாக முஸ்லீம்களாக கிறிஸ்துவர்களாக பிரிப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

சீமான்
சீமான்புதிய தலைமுறை

சீமான் தேர்தலில் பங்கெடுக்கிறார். அவர் முதலமைச்சர் ஆனால் பல்வேறு வாக்குறுதிகளை கொண்டு வருகிறோம் என வாக்குறுதி கொடுக்கிறார். தேர்தலில் பங்கெடுப்பதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. முதலமைச்சர் ஆசை அனைவருக்கும் வருவதற்கான காரணங்கள் இருக்கிறது. ஆனால் மக்களை மத அடிப்படையில் பிரிப்பது ஏற்புடையதல்ல.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகளை கொண்டு வந்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி நடக்கும் சமயத்தில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை கொள்கைத் திட்டமாகவே வைத்திருக்கும் பாஜகவும் கொள்கைகளை வகுக்கும் இயக்கமாக ஆர்எஸ்எஸ் இருக்கிறது. இதை ஆபத்தாக அனைவரும் பார்க்கின்றார்கள். இதற்கெதிராக உலகளவில் கண்டனங்கள் வந்துகொண்டுள்ளது.

பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் கொள்கை ரீதியாகவே இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களை இரண்டாம் தர குடிமக்களக மாற்றுகிறோம், அவர்களை உரிமையற்றவர்களாகவே வைத்திருக்கப்போகிறோம் என பகீரங்கமாக அறிவித்துள்ளனர்” என கூறினார். முழு செய்தியாளர் சந்திப்பு செய்தியில் உள்ள வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com