”விஜய் RSS-ன் பிள்ளை..” - ”மக்கள் நல கூட்டணி ஆரம்பித்தவர்.." திருமாவின் விமர்சனமும் தவெகவின் பதிலும்
விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகியிருக்கிறது என மதுரையில் திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரம் குறித்தான ஒரு போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்து தவெக துணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் பேசியிருக்கிறார். இருவரும் பேசியது என்ன? இது குறித்துப் பார்க்கலாம்..
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்தும், நீதிபதிகளை தேர்வு செய்யும் நீதிமன்ற கொலிஜியம் முறைக்கு அரசியல் தலையீடு இல்லாத புதியமுறையை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில், நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் விசிகவை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் ஆர்ப்பாட்டத்தல் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், " விஜய் மக்களுக்காக கட்சி தொடங்கவில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உதவவே அவர் கட்சி தொடங்கியுள்ளார். அதுதான் அவரது அஜந்தா. அதன்படியே திமுகவை தீயசக்தி தீயசக்தி என்று கூறுவருகிறார். திமுகவை வீழ்த்துவது தொடர்பாக நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஆதரவாக பேசப்போவதில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என்பதே பிரச்னை. சங்பரிவாரை தலையெடுக்க விடாமல் தடுக்க திமுகவோடு இணைந்து இருப்பதே சரியாக இருக்கும். ஆர்எஸ்எஸ்ஸை தலைதூக்க விடாமல் தடுப்பதே எங்கள் அரசியல் நோக்கம்.
மேலும், சீமான் சமீபத்தில் பிராமண கடப்பாரைக் கொண்டு திராவிடத்தை இடிப்பேன் எனக் கூறுகிறார். இதன்மூலம், அவர் பேசுவது தமிழ் தேசிய அரசியல் இல்லை. இந்துத்துவ அரசியல் என்பது தெளிவாகிறது. இருவருக்கும் திமுகவை வீழ்த்துவது மட்டும் நோக்கம் அல்ல. பெரியார், அம்பேத்கர் பேசிய அரசியலை வீழ்த்துவதற்காகவே இவர்கள் பேசிவருகிறார்கள். இதன்மூலம், விஜய் மற்றும் சீமான் இருவரும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகியிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார் இதற்கு விளக்கமளித்துப் பேசியிருக்கிறார். அதில், "திருமாவளவன் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். நேற்று திருமாவளவன் பேசுகையில், திமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள் எனப் பேசியிருக்கிறார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியை ஆரம்பித்து திமுகவை அழிக்கப்பார்த்தவர் தான் திருமாவளவன். ஆனால், அந்தப் போராட்டத்தில் தோல்வியுற்று.. மீண்டும் போராட வலு இல்லாமல். திமுகவுடனேயே சமரசம் செய்துகொண்டு அரசியல் செய்துவருகிறார்.
அதனால்தான் அரசியலில் அவர் முக்கியத்துவம் இழந்திருக்கிறார். எதற்கு அரசியலுக்கு வந்தோம் என்பதையே மறந்து செயல்பட்டு வருகிறார். செவிலியர்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி பேசாமல், திமுகவின் மீது நாங்கள் விமர்சனம் வைத்தால், உடனே ஒரு திமுகவின் ஒரு மாவட்ட செயலாளர் போல எங்களை விமர்சித்து வருகிறார். தற்போது, அவர் விடுதலை சிறுத்தையாக இல்லாமல். திமுகவிடம் அடகுவைத்த பூனையாக திருமாவளவன் செயல்பட்டுவருவது வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

