”நோபல் பரிசு வென்றவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்” - ட்ரம்ப் சொன்ன தகவல்!
அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்காத நிலையில், பரிசு பெற்றவரே தன்னை கௌரவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து அமைதியான மாற்றம் ஏற்படுவதற்காகவும் போராடியதற்காக மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த நோபல் பரிசு அறிவிப்புக் குறித்து பேசியுள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், “அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது. ட்ரம்ப் பேசுகையில், ”உண்மையில் நோபல் பரிசைப் பெற்றவர் இன்று எனக்குத் தொலைபேசியில் அழைத்தார். அவர் என்னிடம், 'நான் இந்தப் பரிசை உங்கள் கௌரவத்திற்காகப் பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இது உண்மையில் உங்களுக்குத்தான் உரியது' என்று கூறினார். நான் அவரிடம், 'அப்படியானால் அதைக் கொண்டு வந்து என்னிடமே கொடுத்து விடுங்கள்' என்று சொல்லவில்லை" என்று கூறி ட்ரம்ப் நகைச்சுவையாகச் சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால், நான் மில்லியன்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினேன்" என்றும் அவர் மேலும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- சீ.பிரேம்குமார்