”அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை; தவெக தரப்பு தகவல்” - திருமாவளவன்!
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் 108 இடங்களில் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்றிருந்தாலும், ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சின் தலைவர் விஜய் மே 10-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றிருக்கின்றன. இந்தசூழலில் தான், முழுமையான அமைச்சரவை எப்போது அமைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தவெக அமைச்சரவை விரிவாக்கம் இந்த வாரத்திற்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பின் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. எனினும், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனவும் தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனவும் தெரிவித்திருந்தன. எனினும், சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது கட்சியின் நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது விசிக அமைச்சரவையில் இடம்பெறுமா? என கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கிடையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெற தவெக விரும்புவதாக தெரிவித்ததுடன் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், "சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறோம். தவெகவுக்கு பெரும்பான்மைக்கு எங்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனக் கூறியிருக்கிறோம். ஆனாலும், எங்களது கட்சி அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய் அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டுமென விரும்புவதாக கூறியிருக்கிறார். எங்களது கட்சி நிர்வாகிகள் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது. அதேபோல, இன்று ஆதவ் அர்ஜுனா மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். எனவே, அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, தவெகவுக்கு அதிமுக எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆதரவளித்திருக்கும் நிலையில், அவர்கள் அமைச்சரவையில் பங்கேற்பார்களா? என கேள்வி எழுந்து வருகிறது. சமீபத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் அதிமுக அமைச்சரவையில் பங்கேற்றால், தவெகவுக்கான எங்களது ஆதரவை பரிசீலிப்போம் என தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், இதுகுறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்களை கேள்வி எழுப்புகையில், “அதிமுக அமைச்சரவையில் பங்கேற்காது என தவெக தரப்பில் இருந்து தகவல் தரப்பட்டது” எனத் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

