”நான் போட்டிட்டது திமுக கூட்டணியில்; பாஜகவுடன் அல்ல” - சீமான் விமர்சனத்துக்கு திருமாவளவன் விளக்கம்.!
விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என விமர்சித்திருந்தார். இதற்கு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆனது நானா அல்லது திருமாவளவனா? என எதிர்வினையாற்றியிருந்தார். இந்த நிலையில் தான் இன்று, மதுரை பெருங்குடி அம்பேத்கர்சி சிலை முன்பு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் விசிக தலைவர் திருமாவளவன் கேக் வெட்டி புத்தாண்டு நாளை கொண்டாடினார். அப்போது, சீமானின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”மங்களூரில் நான் போட்டியிட்டது திமுகவோடு கூட்டணி வைத்து தான். பாஜக இருக்கும் அணியில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களை அழைத்து ”நீங்கள் எங்களோடு தான் கூட்டணி வைத்துக் கொள்கிறீர்கள். நாங்கள் கூட்டணி வைத்துள்ளவர்களோடு நீங்கள் கூட்டணி கிடையாது” என்று பேசினார். அதன் பிறகே, அன்று தேர்தலில் போட்டியிட்டேன். அன்றைய 2001 ஆம் ஆண்டு பாஜகவில் பெயர் சொல்வதற்கு கூட ஆளில்லை. 2001 ஆம் ஆண்டு மங்களூர் தொகுதியில் நான் பெற்றது விசிக வாக்குகளும் திமுக வாக்குகளும் மட்டுமே பாஜக வாக்குகள் அல்ல. மேலும, 2001 இல் திமுகவோடு ஏற்பட்ட முரண்பாட்டால் நான் இரண்டரை ஆண்டு காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறித்தள்ளி வெளியேறினேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வாஜ்பாய் நினைவு நாளுக்க, பிறந்த நாளுக்கு, வாழ்த்து சொல்வதும் இரங்கல் தெரிவிப்பதும் வேறு. இவரை போல பிராமண கடப்பாறை கொண்டு திராவிட இருப்பை தகர்ப்பேன் என்று பேசவில்லை. பெரியாரியத்துக்கு எதிராக பேசவில்லை. இன்றைக்கும் கூட பாஜகவில் யாரும் இறந்தாலோ உடனடியாக அங்கே சென்று நிற்க வேண்டும் என்று விரும்புபவன் நான். இல கணேசன் மறைவுக்கு செல்லாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை இன்றும் தருகிறது.
இல. கணேசன் மீது எனக்கு உயரிய மதிப்பு இருக்கிறது. என் வீடு தேடி வந்து என்னை சந்தித்து ஆறுதல் தெரிவித்தவர் அவர். என் மீதும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. இன்றைக்கும், அவர் மறைந்த போது நான் செல்ல முடியவில்லை என்று வருந்தி கொண்டு உள்ளேன். இது வேறு ஆனால் அவர்கள் பேசும் அரசியலை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிப்பது என்பது வேறு. சீமான் தமிழ் தேசியத்தை, தமிழ் தேசியமாக பேச வேண்டும். அதை விடுத்து அவர் இடதுசாரி அரசியலுக்கு வேட்டு வைக்கும் வகையில் பெரியாரியத்தை இழிவுபடுத்தி பேசுவது சரியல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.

