பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆனது நானா? திருமாவளவனா..? - சீமான் பதிலடி!
திருமாவளவனின் விமர்சனத்திற்கு பதிலளித்த சீமான், பாஜகவுடன் கூட்டணி வைத்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். விஜயகாந்தின் நினைவு தினத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சீமான், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியின் பாதையை விளக்கினார். அரசியல் நாகரிகம் குறித்து திருமாவளவனின் கருத்துக்களை எதிர்த்து பேசினார்.
தமிழக அரசியலில் பாஜகவை கொள்கை எதிரி கூறிவரும் தவெக தலைவர் விஜய் மற்றும் பெரியாரை எதிர்த்து பேசிவரும் நாதக சீமான் இருவரும் பாஜக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிள்ளைகள் என தொடர்ந்து விமர்சனத்தை வைத்துவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.
விஜய் மற்றும் சீமானை விமர்சித்து பேசிய திருமாவளவன், ”சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும் விஜயும் செயல்படுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் பா.ஜ.க விற்கு ஆதரவாக உள்ளது. இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் பேசுவது போல் சீமானும், பெரியார் குறித்து பேசுவது போல் விஜயும் நாடகமாடுகிறார்கள். கொள்கை எதிரியை விஜய் விமர்சிக்கவில்லை, கண்டிக்கவில்லை.
பெரியார் அரசியல் என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியல், விளிம்புநிலை மக்களுக்கான அரசியல் அதை தகர்ப்பேன் என சீமான் கூறுவது இவரே ஆர் எஸ் எஸ் இன் கடப்பாரையாக மாறியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது. அவர் பேசுவது தமிழ் தேசிய அரசியல் அல்ல சனாதன அரசியல்” என விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் தான் திருமாவளவன் கருத்திற்கு பதில் பேசியிருக்கும் சீமான், திருமாவளவனை விமர்சித்து பேசியுள்ளார்.
திருமாவளவனை விமர்சித்த சீமான்..
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பிள்ளை என விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக ஆனது நானா அவரா? வாஜ்பாய்க்கு வீர வணக்கம் செலுத்துவது அரசியல் நாகரீகம் என சொல்கிறார். நான் ஒரு மேடையில் ஏறி பாட்டன் பாதையை பேசியது அரசியல் அநாகரிமா? நான் என் அண்ணனை மதித்து அமைதியா போறன். ஏனா? மோதலை எனக்கும் என் அண்ணனுக்கமானதாக மாற்றிவிட்டு திராவிடன் மஞ்சள் குளிப்பான். என் அண்ணனை எதிர்க்கவா நான் கட்சி ஆரம்பித்தேன்?, விசிக, பாமக,மதிமுக வா எங்களுக்கு எதிரி?
அறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரை எதிர்த்து பேசியதை விடவா நான் அதிகமாக பேசினேன் என கூற சொல்லுங்கள் நான் நிறுத்தி விடுகிறேன். திராவிடர் கழகத்தில் இருந்து திமுக ஏன் பிறந்தது? இன்னும் இந்த கிழவனை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் என யார் பேசியது?
என் மொழியை ஏன் சனியன் சொன்ன, நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம் என பாரதி பாடுகிறார், நீ அதை வேசி கதை என சொல்ற வெறி ஏருமா ஏறாதா?” என பதிலளித்தார்.

