புதுச்சேரி| காங்கிரஸால் இந்தியா கூட்டணிக்கு விழுந்த பலத்த அடி.. தவெகவிற்கு சாதகமான சூழல்!
புதுச்சேரியில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் தனிப்போட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பிளந்து இந்தியா கூட்டணிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருபுவனையில் தவெக வெற்றி, உழவர்கரையில் விசிக வேட்பாளரை விட காங்கிரஸ் முன்னிலை, காரைக்கால் தெற்கில் பாஜகவை விட காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்தது போன்றவை கூட்டணியின் உள்கிளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு குளறுபடிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நட்பு ரீதியான போட்டி கூட்டணி கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. திருபுவனை தொகுதியில் தவெக வேட்பாளர் சாய் சரவணகுமார் 9 ஆயிரத்து 740 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு தனித்துப் போட்டியிட்ட திமுக 6 ஆயிரத்து 630 வாக்குகளையும், காங்கிரஸ் 3 ஆயிரத்து 561 வாக்குகளையும் பெற்றுள்ளன.
ஒருவேளை காங்கிரஸ் அங்கு போட்டியிடாமல் இருந்திருந்தால், திமுக 10 191 வாக்குகளுடன் எளிதாக வெற்றி பெற்றிருக்கும். இதேபோல் உழவர்கரை தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளரான விசிகவை விட, நட்பு ரீதியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றது அக்கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாப்பட்டு மற்றும் ராஜ் பவன் தொகுதிகளில் திமுக நூலிழையில் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்ததால் கடைசி சுற்று வரை கடும் இழுபறி நீடித்தது. காரைக்கால் தெற்கில் திமுக வெற்றி பெற்றாலும், இரண்டாம் இடத்தைப் பிடித்தது நட்பு ரீதியாகப் போட்டியிட்ட காங்கிரஸே தவிர பாஜக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு, திமுக-காங்கிரஸ் வாக்கு பிளவு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ், திமுக, விசிக, இடதுசாரிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீட்டில் தேர்தல் வரை நீடித்த பிணக்கும், இணக்கமின்மையும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு இத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடை வை கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

