நட்சத்திர தொகுதி மயிலம் |தோல்வியால் தொகுதி மாறிய சி.வி.சண்முகம்.. வெல்வாரா?
விழுப்புரம் தொகுதியில் இரண்டு முறை வெற்றி, ஒரு முறை தோல்வி கண்ட அதிமுக முன்னாள் அமைச்சர், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் சி.வி.சண்முகம் இம்முறை மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு மாறியதால், அந்தப் பகுதி நட்சத்திர கவனத்தைப் பெற்றுள்ளது. விவசாய ஆதாரமான, முழுக்க கிராமப்புறமாக உள்ள இந்தத் தொகுதியில், கடுமையான பலகட்சி போட்டி உருவாகி, வாக்காளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விழுப்புரம் தொகுதி என்றதும் நினைவுக்கு வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இம்முறை அவர் மயிலம் தொகுதிக்கு மாறியுள்ளதால், அந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. 2011, 2016, 2021 என மூன்று தேர்தல்களில் விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், இரண்டு முறை வெற்றி கண்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுகவின் லட்சுமணனிடம் தோல்வியை தழுவினார் அவர்.
இந்த முறை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2008இல் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில், இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் அதிமுக, திமுக, பாமக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவக்குமார், 81,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாசிலாமணி வெறும் 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார். விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்ட தொகுதி மயிலம். பேரூராட்சிகளோ, நகராட்சிகளோ இல்லாத, 130 கிராம ஊராட்சிகளைக் கொண்ட முழுமையான கிராமப்புறத் தொகுதி. இங்கு கிட்டத்தட்ட 2 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
மயிலம் முருகன் கோயில், வீடூர் அணை போன்ற அடையாளங்கள் இருந்தாலும், தொகுதியின் தேவைகள் அதிகம். மயிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தனி வட்டம், நதிகளில் தடுப்பணைகள், பெலாக்குப்பம் உணவுப் பூங்காவை முழுமையாகச் செயல்படுத்துவது மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைப்பது போன்றவை மக்களின் முக்கிய கோரிக்கைகள்.
தற்போது ராஜ்ய சபை எம்பியாக இருக்கும் சி.வி.சண்முகம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் விஜய் விக்ரம், தவெக சார்பில் நிரஞ்சன் ஆகியோரும் களமிறங்கியிருப்பதால், எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியிருக்கிறது.

