Thiruma Slams Police, Medical System Over Akash Delison’s Death
திருமாவளவன்Pt web

ஆகாஷ் உடலில் 28 காயங்கள்.. காவல் துறையின் மூர்க்கத்தனமே காரணம் - திருமாவளவன் குற்றச்சாட்டு.!

ஆகாஷ் டெலிசனின் மரணத்திற்கு காவல்துறையின் மூர்க்கத்தனமும் மருத்துவத்துறையின் அலட்சியமுமே காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கியதில், ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்தக் குற்றச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து மானாமதுரை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். காவல்துறையின் தேடுதலில் ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இவர்களை கைது செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது ஆகாஷ் என்ற இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, கால் முறிந்த ஆகாஷ் டெலிசன் முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் 8-ம் தேதி ஆகாஷ் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஆகாஷ் டெலிசன்
ஆகாஷ் டெலிசன்Pt web

இந்த மரணத்தில் பின்னணியில் காவல்துறையினர் இருப்பதாகவும், காவல்துறையினர் தங்களின் சாதி குறித்துப் பேசியதாகவும் ஆகாஷின் பெற்றோர்கள் மதுரை உயர்நீதித் துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், ஆகாஷும் தனது கடைசி வாக்குமூலத்தில் போலீசார் தனது காலை உடைத்ததாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், 5 நாட்களுக்கு மேலாக ஆகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்டக் காவலர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில் ஆகாஷின் உடற்கூராய்வு அறிக்கையில், 28 காயங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, 5 நாட்களாக நடந்து வந்த போராட்டம் நிறவுபெற்றிருக்கிறது.

Thiruma Slams Police, Medical System Over Akash Delison’s Death
மானாமதுரை | ஆகாஷ் காவல்நிலைய மரணம்..? உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்தநிலையில் தான், உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரைச் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ஆகாஷ் திலீபனின் வலது கால் எலும்பு முறிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதே மரணத்திற்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவித்தார். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை ஆகாஷ் எதிர்த்து வந்ததால், அவர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டதில் ஆகாஷை மட்டும் தனிமைப்படுத்தி அவரது எலும்பை உடைத்துள்ளனர். கால் எலும்பு முறிக்கப்பட்ட நிலையில், சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்Pt web

காவல்துறையின் மூர்க்கமான போக்கும், மருத்துவத்துறையின் அலட்சியமுமே இந்த உயிரிழப்பிற்கு நேரடி காரணமாகும். கிராமப்புறங்களில் பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் திலீபன் குறிவைக்கப்பட்டதற்குக் அடிப்படை பின்னணியாகும். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பதுடன், சம்பந்தப்பட்ட காவலர்களை வெறும் பணியிடை நீக்கம் மட்டும் செய்யாமல், உடனடியாகக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், திலீபன், குகன் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியா முழுவதும் இத்தகைய கொடுமைகள் நடந்தாலும், தற்போது நிலவும் விழிப்புணர்வால் காவல் நிலையங்களில் புகார்கள் வாங்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் அரசு தீவிரமான நடவடிக்கை வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Thiruma Slams Police, Medical System Over Akash Delison’s Death
”திமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை; கனிமொழி முற்றுகையே சாட்சி” - கே. பழனிசாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com