ஆகாஷ் டெலிசன்
ஆகாஷ் டெலிசன்Pt web

மானாமதுரை | ஆகாஷ் காவல்நிலைய மரணம்..? உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் நேற்று உயிரிழந்திருக்கும் நிலையில், 2-வது நாளாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
Published on
Summary

மானாமதுரையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கியதில், ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, தாக்குதலுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்த நிலையில் தான், இந்தக் குற்றச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து மானாமதுரை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

ஆகாஷின் தந்தை
ஆகாஷின் தந்தைPt web

காவல்துறையினரின் தேடுதலில், ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இவர்களை கைது செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது ஆகாஷ் என்ற இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கால் முறிந்த ஆகாஷ் டெலிசன் முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சூழலில் தான், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி மூச்சுத் தினறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆகாஷ் டெலிசன்
சுடும் வார்த்தைகள்.. கற்றோர் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவ்வளவு பிற்போக்கா?

இந்த சம்பவம் குறித்துப் பேசிய அவரது பெற்றோர்கள், ”ஆகாஷ் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது. விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்துள்ளனர். என் மகன் மீது காவல்துறையினர் சாதிய ரீதியாக பேசி குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், என் மகன் உயிரிழந்திருக்கிறான்” என தெரிவித்தனர்.

ஏற்கனவே, மானாமதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அஜித்குமார் லாக்கப் டெத் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்x

உறவினர்கள் போராட்டம்

இந்த சூழலில் தான், ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவரது சொந்த ஊரான மானாமதுரையில் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே நேற்று காலை 9 மணி முதல் சாலை மறியல் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்த நிலையில், போராட்டக்காரர்கள் சாலையிலேயே படுத்து உறங்கியபடி இன்று காலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகாஷ் டெலிசன்
வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு.. இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்!

இரண்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்று வழியில் மாற்றி விடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடாக பல்வேறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரம் செல்ல செல்ல போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போராட்டம் மேலும் வீரியம் அடைந்து வருகிறது.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்pt web

உடற்கூறாய்வுக்கு உத்தரவு.!

ஆகாஷ் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆகாஷின் உடலை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தலைமையில் விரைவாக உடற்கூறாய்வு செய்யவேண்டும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் டெலிசன்
மானாமதுரை | காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com