கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா

கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா

கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா
Published on

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

விடாது கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றன எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலப்புழா மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே‌ காட்சியளிக்கிறது. ஆலப்புழாவில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் நீரில் முழ்கியுள்ளன. வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். விளைநிலங்களைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் தென்னை, வாழை, நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு நிலைகளில் மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடிந்து வரும் நிலையிலும், பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் எடப்பல் பகுதியில் பெட்ரோல் நிரப்புவதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் கில கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திரு‌ந்தனர். பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்ததால் முகாம்களிலிருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பும் மக்கள், வீடுகளில் முதலை, பாம்பு போன்ற உயிரினங்கள் தஞ்சமடைந்திருப்பதை கண்டு அச்சமடைகின்றனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் மழை வெள்ளம் வடிந்து வீட்டுக்குள் சென்றவர்கள் முதலை ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்குருந்த இளைஞர்கள் முதலையை கயிற்றால் கட்டி, பிடித்தனர். குடியிருப்புகளில் சில அடி உயரத்துக்குச் சேறும், சகதியும் நிறைந்திருக்கிறது. பாதுகாப்பு இல்லாமல் வீடுகளைச்சுத்தம் செய்ய வேண்டாம் என்றும், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வீடுகளை சுத்தம் செய்யவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கும் நிலையில், கேரள நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா உயர்மட்ட கூட்டம் கூட்டி ஆலோசித்தார். அப்போது கேரளாவின் நிலைமையை தனிப்பட்ட முறையில் தானே கவனித்து வருவதாகவும், இதுவரை தொற்று நோய் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். கேரள சுகாதார துறை அமைச்சரிடம் தொடர்ந்து பேசி நிலவரத்தை கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 அவசரகால மருந்து பொருட்கள் 65 மெட்ரிக் டன் மற்றும் ஒரு கோடி குளோரின் மருந்துகள், 20 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை கேரளாவுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போல 12 மாவட்டங்களுக்கு என கூடுதலாக12 மருத்துவ குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மாநிலம் குடகுக்கும் மத்திய அரசு மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com