தேனி | சாலை வசதி இல்லாத மலை கிராமம் - உடல் நலம் பாதித்த பெண்ணை டோலி கட்டி தூக்கி வந்த அவலம்
செய்தியாளர்: J.அருளானந்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ள கெவி, பெரியூர், சின்னூர் உள்ளிட்ட ஐந்து மலை கிராமங்கள் உள்ளன. வெள்ள கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் ஆகிய இரண்டு மலை கிராமத்திற்கும் பெரியகுளத்தில் இருந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் சின்னூர் மலை கிராமத்தில் வசித்து வரும் நாகம்மாள் (60) என்ற பெண்ணிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் அந்தப் பெண்ணை டோலி கட்டி 7 கிமீ தொலைவிற்கு மேல் தூக்கி வந்து பெரியகுளம் அருகே உள்ள கல்லாற்று பகுதிக்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் போது அவர்களை டோலி கட்டி தூக்கி வரும் அவல நிலை உள்ளது இதை மாற்ற வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க, சாலை பணிகளை விரைந்து முடித்து முழுமையான சாலை வசதி செய்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.