ஜப்பான் மாம்பழத்தின் மீது ஆசைப்பட்ட மனைவி - இயற்கை விவசாயியின் விநோத செயல் - நடந்தது என்ன?
செய்தியாளர்: சுமன்
கன்னியாகுமரி மாவட்டம் பூவியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பரசு - ஜெய கல்யாணி தம்பதியர். இயற்கை விவசாயியான அன்பரசு, நர்சரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த மியாசாகி என்ற விலையுயர்ந்த மாம்பழம் தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் பார்த்த ஜெய கல்யாணி, இந்த மாம்பழத்தை வாங்கித் தருமாறு அன்பரசுவிடம் ஆசையாக கேட்டுள்ளார்.
இந்த பழத்தின் சிறப்பு என்று பார்த்தால், ஜப்பானின் மியாசாகி நகரத்தில் விளையக் கூடிய இந்த ரக மாம்பழம், சர்வதேச அளவில் அதிக விலைக்கு விற்பனையாகும் பழமாக இருக்கிறது. ஒரு கிலோ மியாசாகி மாம்பழம் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் விற்பனையாகிறது. மனைவி ஆசைப்பட்டுக் கேட்டதால், மியாசாகி பழம் குறித்த முழு விவரங்களையும் தேடித் தெரிந்து கொண்ட அன்பரசு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மியாசாகி ரக செடியை விலைக்கு வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
இதையடுத்து மூன்று ஆண்டுகால இடைவெளியில் சிறு மரமாக வளர்ந்த நிலையில், தற்போது ஒரே ஒரு காய் மட்டும் வைத்து அது கனியாகியுள்ளது. அதுவும் 600 கிராம் எடையில் காய்ந்திருக்கிறது இந்த கனி. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அன்பரசு, பழத்தைப் பறித்து தனது மனைவி ஜெய கல்யாணிக்கு பரிசளித்தார். பழத்தை எப்படியாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட மனைவிக்கு, மரத்தையே வளர்த்து பழத்தை விளைவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கணவர்.
குறிப்பாக, ஜப்பானில் விளைவிக்கப்படும் உயர்ந்த தர மாம்பழத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவித்து சாதனை படைத்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயியான அன்பரசு, தனது நர்சரியில் பல வகை கன்றுகளை வைத்து குறைந்த விலையில் கொடுத்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அன்பரசு. இந்த தகவலைக் கேட்டு, அன்பரசுவின் தோட்டத்திற்கு பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.