சீர்காழி: இறந்த தந்தையின் உடலை சாலையின் நடுவில் புதைத்த மகன் - அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி!

சீர்காழியில் புதிதாகப் போட்ட சாலையைத் தோண்டி இறந்தவரின் உடலைப் புதைத்த குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையின் நடுவில் புதைக்கப்பட்ட உடல்
சாலையின் நடுவில் புதைக்கப்பட்ட உடல் PT WEP

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழ் அகரம் பகுதியில் முதலமைச்சரின் கிராமசாலை திட்டத்தில் கீழ் 42 லட்சம் மதிப்பீட்டில் 823 மீட்டர் தொலைவிற்கு புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு எளிதாகச் சென்று வர முடியும். அதே போல் அருகில் உள்ள முதலைமேடு, அனுமந்தபுரம், உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாகவும் அமையும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். மண் சாலையாக இருந்து வந்த சாலை தற்போது தார் சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கீழ் அகரம் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையும், மயான இடமும் ஒன்றுதான் எனக் கூறி அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் புதைக்கப்பட்ட சடலம்
சாலையில் புதைக்கப்பட்ட சடலம்

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அருகே உள்ள மயானத்தில் புதைக்காமல் புதிதாக அமைக்கப்பட்ட சாலையைத் தோண்டி சுந்தரராஜனின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புதைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சென்ற சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

சாலையின் நடுவில் புதைக்கப்பட்ட உடல்
திருத்தணி: கடன் தொல்லையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சாலைப் பணிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், மயானம் இருந்தும் புதிய சாலையைச் சேதப்படுத்தி உடலைப் புதைத்தவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும், புதைக்கப்பட்ட நபரின் உடலை அப்புறப்படுத்தி சாலைப் பணிகளைத் துவங்கவும் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆச்சாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து போன சுந்தர்ராஜன் மகன் விஷ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சாலையில் புதைக்கப்பட்ட சுந்தர்ராஜனின் உடலைத் தோண்டி எடுத்து மயானத்தில் முறைப்படி அடக்கம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

புதியதாகப் போடப்பட்ட சாலையில் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் நடுவில் புதைக்கப்பட்ட உடல்
காதலியை கொலை செய்துவிட்டு "வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்" வைத்த காதலன்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com