ஆம்னி பேருந்துகள் இயங்காது... ஊர் திரும்பக் காத்திருக்கும் மக்களின் கதி..!

தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்று பொதுமக்கள் ஊர் திரும்ப உள்ள சூழலில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
ஆம்னி பேருந்துகள் சங்கங்கம்
ஆம்னி பேருந்துகள் சங்கங்கம்முகநூல்

தொடர் விடுமுறை முன்னிட்டு இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, 'அதிக கட்டண வசூல்' என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேருந்துகளை விடுவிக்கக்கோரி இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வாரவிடுமுறை, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதோடு அவற்றிற்கு சுமார் 19 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க வலியுறுத்தி, இன்று மாலை (24.10.2023) 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ”ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசையும் பயணிகளையும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்றுவரை இயக்கிக் கொண்டுள்ளோம்.

போக்குவரத்துறை அமைச்சர்
போக்குவரத்துறை அமைச்சர் முகநூல்

கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிககட்டணம் புகார் இல்லாமல் இயக்கிவருகிறது. ஆயினும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்திருக்கிறார்கள். அந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும்,

மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்த வேண்டும். எனவே 24.10.2023 இன்று மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது. 24.10.2023 (இன்று) ஆம்னி பேருந்துகளில் 1 லட்சத்திற்கு மேலாக பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து ஆம்னி பேருந்து சங்கங்களும் இணைந்து இதனை தெரிவிக்கிறோம் “ என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை, கோயம்பேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் பேசுகையில், “மோட்டார் வாகன விதிப்படி ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத சூழலில் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக வந்த போக்குவரத்து ஆணையர் மண்டல அதிகாரிகளை வாகனங்களை சிறைப்பிடிக்க நிர்பந்திக்கிறார். இதன் காரணமாக உரிய காரணங்களின்றி வாகனங்களை சிறைப்பிடிக்கின்றனர். வாகனங்களை சிறைப்பிடிப்பதால் பாதியிலேயே பயணிகள் இறக்கி விடப்படுவதால் மிகுந்த சிரமப்படுகிறனர்.

முதலமைச்சர்
முதலமைச்சர்முகநூல்

கடந்த 20 வருடங்களாக அரசிடம் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி வலியுறுத்தி வருகிறோம். இன்றைய தினம் 100 பேருந்துகளை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வருகிறது. அதன் காரணமாக இன்றைய தினம் பேருந்துகளை இயக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

அரசு ஆம்னி பேருந்துகள் இயங்கக் கூடாது என விரும்பினால் நெருக்கடி அளிக்காமல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.முதலமைச்சர் தலையிடுவதோடு அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகள் சங்கங்கம்
விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகள்; களத்தில் இறங்கி போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில், விடுமுறை நிறைவடைந்ததால் இன்று மாலை பயணத்திற்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் சேவை பாதிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com