"ஏதாவது செய்யுங்க.."- கொச்சின் கடலில் விழுந்து மாயமான தூத்துக்குடி இளைஞர்.. கர்ப்பிணி மனைவி கண்ணீர்!
செய்தியாளர்: மணி சங்கர்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி சாலமோன் நகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் - கல்யாண சுந்தரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அண்ணாதுரை (30). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சந்தனச்செல்வி என்ற மனைவியும், சஞ்சய் என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அண்ணாதுரை கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெர்க் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.
குஜராத் கடல் பகுதிக்கு சென்றபோது நேர்ந்த துயரம்:
தற்போது இராமநாதபுரம், தூத்துக்குடி பகுதியில் போதிய மீன்வரத்து இருக்காது என்ற காரணத்தினால் கடந்த நவம்பர் 14-ஆம் தேதியன்று அண்ணாதுரை மற்ற மீனவர்களுடன் சேர்ந்து கொச்சின் கடல் பகுதியில் விசைப்படகில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவாறு, கடந்த நவம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொச்சின் கடல் பகுதியில் இருந்து குஜராத் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
கடலில் தவறிவிழுந்து மாயமான இளைஞர்:
அப்போது எதிர்பாராத விதமாக அண்ணாதுரை திடீரென கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்காமல் மாலை 5 மணிக்கு "அண்ணாதுரை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து விட்டார் என்றும், அவரை தேடிக் கொண்டிருக்கிறோம்.." என்றும் அண்ணாதுரையின் பெற்றோருக்கு படகின் உரிமையாளர் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அண்ணாதுரையின் பெற்றோர் மற்றும் மனைவி சந்தனச்செல்வி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த உறவினர்கள்:
இதையடுத்து உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று இதுபற்றி கூறி தங்களது மகனை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள மற்றும் மீனவர்கள் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், மும்பையில் உள்ள கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய தளபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அண்ணாதுரை கடலில் விழுந்து மூன்று நாட்கள் ஆகியும் தற்போது வரை எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தினால் அவரது மனைவி, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
”என் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்” - கண்ணீர் விட்டு கதறிய இளைஞரின் மனைவி!
அண்ணாதுரையின் மனைவிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், "என் கணவர் கடலில் விழுந்து 3 நாளாகி விட்டது, ஆனால் இதுவரை யாரும் சரியான பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. என் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்” என்று கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களையும் கண்கலங்கச் செய்தது.
இவ்விவகாரம் தொடர்பாக 2 முறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டும் தமிழக அரசு சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அண்ணாதுரையின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் கோரிக்கை:
”கடலில் விழுந்து மூன்று நாட்கள் ஆகிய பின்பும் தற்போது வரை கடலில் விழுந்த அண்ணாதுரை பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருப்பது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தேடுகிறோம் தேடுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையாக தேடுகிறார்களா என்ற சந்தேகமே எங்களுக்கு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக குஜராத் மாநில அரசை தொடர்பு கொண்டு குஜராத் பகுதி கடலில் விழுந்து மாயமானதாக சொல்லப்படும் அண்ணாதுரையை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அண்ணாதுரையின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.