“ஆதவ் அர்ஜுனா விசிக-வை இரண்டாக உடைத்து விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது” – கொ.ம.தே.க ஈஸ்வரன்
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசிய போது...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தடையாக இருந்தார்:
“கடந்த ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் மாவட்டங்களை பிரித்திருக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சியும், ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டிப்பாளையமும், சேலத்தில் இருந்து ஆத்தூரையும் பிரித்து மாவட்டமாக அறிவித்திருக்க வேண்டும். கொங்கு மண்டபத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரிக்க முதல்வர் முன்வர வேண்டும். கடந்த ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் பிரிக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தடையாக இருந்தார்” - என்றார்.
ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைத்து விடுவார் என்ற சந்தேகம் உள்ளது:
பின், “என்னை பொருத்தவரை ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தலுக்கு பிறகு சூழ்நிலையை பொறுத்து தானாக அமையும். தற்போது பேசுவது பத்திரிகை கவனத்தை ஈரப்பதும் தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்பதற்காக செய்வதும்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா குரல் தான் இதை துவக்கியுள்ளது. ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஊடுருவிக் கொண்டிருக்கிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைத்து விடுவார் என்ற சந்தேகம் உள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.
“தேர்தல் அறிவித்த பிறகு கூட கூட்டணி அமையும்”
“2024ல் பலமான கூட்டணி அமையும் என இபிஎஸ் கூறியது நடக்கவில்லை என்பதால் ஊடகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது இதை பேசுவது தேவையற்றது. தேர்தல் அறிவித்த பிறகு கூட கூட்டணி அமையும். கடந்த ஆட்சியில் பல கோயில்களுக்கு அறங்காவலர்கள் போடவில்லை. தற்போது அறங்காவலர்கள் போடப்பட்டுள்ளனர். திமுகவை பொறுத்தவரை ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவர்கள்தான் அவர்களுடையது. கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. பழனியில் முருகனுக்கு விழா எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
“கூட்டணியில் பங்கு என விஜய் அறிவித்திருப்பது தவறானது”
“கொங்கு மண்டலத்தில் இருந்து விஜய் கட்சி மாநாட்டிற்கு அதிகமாக மக்கள் செல்லவில்லை. கூட்டணி ஆட்சி என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டில் தெரிவித்துள்ளது குறித்து விவாதிப்பது தவறு. அந்த கட்சி தற்போதுதான் ஆரம்பித்துள்ளது. இன்னும் அவர்கள், மாவட்ட செயலாளரை கூட நியமிக்கவில்லை. கூட்டணி என மாநாட்டில் அறிவித்திருப்பது தவறானது. அதை யாரோ சொல்லி கொடுத்துள்ளார்கள். ஒருவேளை ஆதவ் அர்ஜூனாக இருக்கலாம். ஏனெனில் ஆதவ் அர்ஜூன் அரசியல் கட்சிகளுக்கான ஸ்டேடர்ஜி பிளான் செய்யும் நிறுவனம் வைத்துள்ளார்”
கள் இறக்க அரசு தடையை நீக்க முன்வர வேண்டும்:
“அவினாசி, அத்திக்கடவு திட்டத்திற்கு அதிமுக இரண்டாம் கட்ட திட்டம் போட்டதாக தெரியவில்லை. கோதாவரி-காவிரி இணைப்பு என்பது ஒன்றிய அரசு செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என விரும்புகிறது. ஆனால், தமிழ்நாட்டை வளர்க்க விரும்பவில்லை. தமிழ்நாடு வளர நதிகளை இணைக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு வந்தபோது நதிகள் இணைக்கப்படும் என்றார். ஆனால், நடக்கவில்லை. அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு காளிங்கராயன் பெயர் வைக்கவேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். கள் இறக்க அரசு தடையை நீக்க முன்வர வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதை அரசு தடுக்க கூடாது” என்று தெரிவித்தார்.