'நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய' கட்டிடங்களும், மாவீரன் பேசிய அரசியலும்!

நகரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு என்பது வடிவமைக்கப்படுகிறது. தேவை என்றால் நீர்நிலைகளாக இருந்த பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா கொடுத்து விடுகிறார்கள்.
மாவீரன்
மாவீரன்pt web

பொதுவாக மக்கள் அனைவருக்கும் வீடு கட்ட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. அதில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கும் சொந்தமாக சிறிய அளவிலான வீட்டையாவது கட்டி அதில் குடி புகுந்துவிட வேண்டும் என்பது கண்ணிறைந்து இருக்கும் கனா. மக்களின் தேவைகளை உணர்ந்து அரசு அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவது உண்மையாக பாராட்டுகுறியதும் வரவேற்கப்பட வேண்டியதும் ஆகும். அப்படி ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் குடிசை மாற்று வாரியம்.

கருணாநிதி
கருணாநிதி

1970 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டம். அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்று குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்வியலை மேம்படுத்த அவர்களுக்கு சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதே திட்டத்தின் நோக்கம். சென்னை மக்களுக்கு முதலில் தொடங்கப்பட்ட திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

மிகப்பெரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பான இந்தத் திட்டம், சில தவறுகளால் சில அதிகாரிகளின் கவனக்குறைவால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் போது பிரச்சனைகளை உருவாகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை கலைப்படைப்பாக உருவாக்கும் போது அந்த பிரச்சனை கூடுதலான மக்களைச் சென்றடையும். அப்படி உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாவீரன். குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் ஏற்படும் தவறுகளால் உருவாகும் பிரச்சனைகளை இயக்குநர் மடோன் அஸ்வின் திரைப்படமாக உருவாக்கி இருப்பார்.

கதையின் படி, அரசியல் கட்சிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக சரியான முறையில் கட்டிடங்களை கட்டாமல், ஏதோ கடமைக்கு கட்டியிருப்பார்கள். அதனால், மக்கள் பல சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகி இறுதியில் அந்த கட்டிடமே இடிந்துவிழும் நிலை ஏற்படும். சென்னை புளியந்தோப்பு அருகில் உள்ள கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் (2016ம் ஆண்டு) நடந்த சம்பவங்களை நினைவுகூறும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த சம்பவம் ஏற்படுத்தியது. தொட்டாலேயே சிமெண்டுகள் உதிர்ந்து கொட்டும் நிலையில் கட்டிடம் இருந்தது. கள ஆய்விலும் இது உறுதி செய்யப்பட்டது. இதனை மிக நுணக்கமாக காமெடி கலந்த தொணியில் பேசியிருப்பார் இயக்குநர்.

மாவீரன்
மாவீரன்

மாவீரன் பேசிய கதைக்களம் தற்போது விவாத பொருளை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இந்த விவகாரங்களில் களத்தில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வாவை தொடர்பு கொண்டோம்.

அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி ரகம். அவர் கூறுகையில், “மாவீரன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குநரே பேட்டிகளில் சொல்லியுள்ளார். கே.பி.பார்க்கில் உள்ள மக்களின் பிரச்சனைகளை நேரில் பார்த்தேன். மக்கள் போராட்டங்கள் செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றெல்லாம் தெரிவித்திருந்தார். கே.பி.பார்க் தொடர்பாக மக்கள் நடத்திய போராட்டங்களை எல்லாம் கள ஆய்வு செய்துள்ளார்கள். விலாவரியாக ஆய்வு செய்து திரைப்படத்திற்கான கதைக்களமாக அதை மாற்றியுள்ளார்கள்.

சமகால மக்களின் வாழ்விடங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அதற்கு மக்கள் செய்யும் போராட்டங்களையும் திரைப்படத்தில் அவர் பயன்படுத்தியுள்ளார். முதலில் இந்த விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன்
மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன்

குடிசை மாற்று வாரியங்களின் உருவாக்கம் 1972 தான். கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்களோ அவரவர்களுக்கு அந்த இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவிற்கே முற்போக்குத் திட்டம்.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால், ஒரு இடத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். குடிசை மாற்று குடியிருப்பிற்குள் இருக்கும் மக்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வரவில்லை. எல்லோரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். இங்கேயே உழைத்து வருமானம் தேடிக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களைத்தான் இப்போது நகரத்தின் விரிவாக்கம், வளர்ச்சி அல்லது ஆக்கிரமிப்பு என வரைமுறைப்படுத்தி மக்களை வெளியேற்றுகிறார்கள்.

கலைஞர் இத்திட்டத்தை உருவாக்கும் போது அது தரைதளம் மற்றும் 3 தளம் (G+3) தான். 3 தளங்கள் இருப்பதால் படிகட்டுகளில் ஏறி இறங்குவதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் இப்போது G+9 G+11 வரை செல்கிறார்கள். அவசர தேவைகளுக்கு வேகமாக இறங்கி வர முடியாது. இப்போது இருக்கும் கட்டமைப்பே விமர்சனத்திற்கு உரிய ஒன்று. 9 தளம், 11 தளம் என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இப்போது பயனாளித் தொகையாக ஐந்தரை லட்சத்தை கேட்கிறார்கள். இது முன்னால் கிடையாது. வீடுகளை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டித் தருகிறோம் என சொல்லுபவர்கள் அவ்வாறு செய்யாததினால் மக்கள் தகர கொட்டைகையில் வசிக்கும் நிலைக்கு செல்கிறார்கள். வீடுகளை இடித்து விட்டு 18 மாதங்களுக்குள் வீடுகளை கட்டித் தருகிறோம் என சொல்லி 24 ஆயிரம் பணமும் கொடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கோட்டூர் புரத்தில் வீடுகளை இடித்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இன்னும் வீடுகளை கட்ட ஆரம்பிக்கவே இல்லை. கொடுக்கும் பணத்தை வைத்து மக்களால் எத்தனை மாதங்கள் வசிக்க முடியும். இந்நிலையில் எளிய மக்களின் வாழ்வு இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

நகரத்திற்குள் இருக்கும் இடங்களில் குடிசை மாற்று குடியிருப்புகளை கட்டுவதைத் தாண்டி நகரத்திற்கு வெளியே விரட்டப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்குகிறார்கள். கலைஞர் எப்படி மக்கள் இருக்கும் இடத்திலேயே வீடுகளை உறுதி செய்தாரோ, இப்போது அதற்கு மாறாக உழைக்கும் மக்களை வெளியேற்றும் செயலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கும். ஆனால் அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றனர்.

மக்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் உண்மை நிலவரம் வெளியில் தெரிவதில்லை. ஓரிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் போது அங்கு மக்களின் கணக்கை எடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கிருந்த வீடுகளுக்கும் அரசு கூறும் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருக்கும். முறைகேடுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் உண்மை நிலவரம் வெளியில் தெரிவதில்லை. உங்களை அப்புறப்படுத்தி உங்களுக்கு வீடு கொடுப்பதில் அரசுக்கு எவ்வித கவலையும் இல்லை. கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் இருந்து பணம் வாங்குவார்கள். அதுமட்டுமின்றி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறி நகரத்திற்கு வெளியில் சென்றால் அவர்களுக்கு மிக சந்தோசம்.

ஜி. செல்வா., சிபிஐஎம்
ஜி. செல்வா., சிபிஐஎம்

நகரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு என்பது வடிவமைக்கப்படுகிறது. தேவை என்றால் நீர்நிலைகளாக இருந்த பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா கொடுத்து விடுகிறார்கள். ஆக்கிரமிப்பு என வரையறை செய்வது கார்ப்பரேட் நலனை முன்னிறுத்தி உழைக்கும் மக்களுக்கு எதிரான நிலையில் தான் இந்த வரையறை உள்ளது. நகர வளர்ச்சி, நகர விரிவாக்கம் ஆகியவற்றின் தற்போதைய பார்வையே விரைவில் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com