திருச்சியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட்
திருச்சியில் இளம்பெண் உயிரிழக்கக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல ஐஜி பிறப்பித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூரில் வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை மதுபோதையில் எட்டி உதைத்ததில் கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்தார். திருவெறும்பூர் பெல் ரவுண்டானா பகுதியில் உஷா என்ற இளம்பெண் தமது கணவர் ராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாத காரணத்தினால் வாகன சோதனையின்போது ராஜா நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்களை 7 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல ஐஜி பிறப்பித்துள்ளார். காமராஜ் ஏற்கெனவே கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் உயிரிழக்கக் காரணமான காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதியும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.