முதலிடம் TO 3ஆம் இடம் | தமிழ்த்தாய் வாழ்த்து கடந்துவந்த பாதை.. முதலில் சட்டமாக்கப்பட்டது எப்போது?
இந்தியாவில் பொதுவாக, ஒரு பொதுநிகழ்ச்சி நடக்கும்போது அது கடவுள் வாழ்த்தோடு தொடங்கும் நிலைதான் பல ஆண்டுகளாக நீடித்தது. தமிழ்நாட்டிலும் அதே சூழலே தொடர்ந்த நிலையில், 1914-ம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய 'நீராரும் கடலுடுத்த' பாடல் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டது. மேலும் தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் இந்த பாடலையே பாடவேண்டும் என்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தொடர்ந்து இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் தேசிய கீதமான 'ஜன கன மன' பாடலை பாடுவது வழக்கமான இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்குப் பின்னர் தமிழக அரசின் பாடலைத் தேர்வுசெய்யும் பனி தொடர்ந்து நடந்துவந்தது.
இறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய 'நீராரும் கடலுடுத்த' பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான அரசாணையை 1970-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதில் =நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்றும், நிகழ்ச்சிகள் நிறைவடையும்போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் பின்னர், தமிழ்நாட்டின் அனைத்து அரசு விழாக்கள், பள்ளிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடும் வழக்கமும், இறுதியில் தேசிய கீதம் பாடும் வழக்கமும் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ’மாநிலப் பாடல்’ ஆக முறைப்படி அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.
எனினும், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எந்தப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பதில் மாநில அரசின் விதிமுறைக்கும், ஆளுநர் மாளிகையின் நடைமுறைக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடுகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரின் பதவியேற்பு நிகழ்வின்போது 'வந்தே மாதரம்' பாடல் முதலாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் தலைமையில் நடந்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படுவதற்கு முன்பாக, ஆளுநர் மாளிகை நெறிமுறையின்படி 'வந்தே மாதரம்' பாடல் முதலாவதாகப் பாடப்பட்டது. அப்போதும் 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

