மகாராஷ்டிரா | பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம்.. ராகுல் காந்தி கண்டனம்!
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இது தற்கொலை அல்ல, நிறுவனக்கொலை எனக் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி பல்தான் பகுதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். ஹோட்டல் நிர்வாகத்தின் தகவலின் பேரில் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டனர்.
அப்போது, அவரின் உள்ளங்கையில் தற்கொலை குறிப்பொன்று எழுதப்பட்டிருந்தது. அதில், இரண்டு போலீஸ் அதிகாரியான கோபால் பதானே மற்றும் பிரசாந்த் பங்கார் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதே தனது தற்கொலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ள நிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சம்பத்தப்பட்ட பெண் மருத்துவருக்கு தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் மருத்துவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் எம்.பி ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான், இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்றவர்களின் துன்பத்தைப் போக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் நிறைந்த அதிகார வர்க்கம் மற்றும் அமைப்பில் உள்ள குற்றவாளிகளின் சித்திரவதைக்குப் பலியாகிவிட்டார். குற்றவாளிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவரே, அப்பாவியான இந்த பெண் மருத்துவருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் போன்ற மிக இழிவான குற்றத்தைச் செய்துள்ளார். இது தற்கொலை அல்ல – இது நிறுவனக் கொலை ஆகும்.
பா.ஜ.க.வுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள், டாக்டர் சம்பதா மீது ஊழல் செய்யும்படி அழுத்தம் கொடுக்க முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரம் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாக மாறும் போது, நீதியை யாரிடம் எதிர்பார்ப்பது? டாக்டர் சம்பதாவின் மரணம், இந்த பா.ஜ.க. அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் உணர்ச்சியற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகள்களுக்கும் - இனி பயம் அல்ல, நீதி வேண்டும். டாக்டர் சம்பதா முண்டேவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

