“அப்பா இழந்த வலி இருந்தாலும், குடும்பத்த பாத்துக்கனும்”-விபத்தில் இறந்த மாணவியின் உருக்கமான வீடியோ!
உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். சாக்கு வியாபாரியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மகள் வித்யா ஸ்ரீ (19). தந்தை இறந்தநிலையில் தாயார் அரவணைப்பில் வளர்ந்து வந்த வித்யா ஸ்ரீ, சொந்தபந்தத்தின் உதவியை நாடாமல் சொந்தகாலில் நிற்கவேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு வேலைக்கு சென்று, தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை இழந்த வலியிருந்தும் சொந்தகாலில் நின்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!
இந்நிலையில், நேற்று மாலை கல்லூரிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வித்யா ஸ்ரீ, தாராபுரம் ஐ.டி.ஐ. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த ஆடி சொகுசு கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் வித்யாஸ்ரீயை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிருக்கு போராடிய நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு எதுவும் செய்ய முடியாது எனக் கூறியதால், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வித்யாஸ்ரீ உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த அஸ்வின்(26) என்பவரை, தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம்!
கார் விபத்தில் மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் மரணத்தால் அவர் படித்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
வித்யா ஸ்ரீயின் மரணத்தை தாங்க முடியாத மாணவிகள், கண்ணீர் சிந்திய நிலையில் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். இந்நிலையில் மாணவி வித்யாஸ்ரீ கல்லூரி விழாவில், தனது லட்சியம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கல்லூரிக்கு அருகே வேகத்தடை இல்லாததால் விபத்து அதிகமாக நேர்கிறது!
இதுகுறித்து உடன் படிக்கும் மாணவிகள் கூறுகையில், கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு தெக்கலூர் பகுதி சென்று தான், தாராபுரம் வருவதற்கு திரும்ப வேண்டி உள்ளது. இதனால் எதிரே இருக்கும் ரோட்டில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கல்லூரி அருகே வேகத்தடை இல்லாமல் இருப்பதால், மதுரையில் இருந்து கோவை-திருப்பூருக்கு செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவே வருகின்றன.
வேகத்தடையோ அல்லது தானியங்கி சிக்னல் அமைத்தால் மட்டுமே விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பது, பல வருட கோரிக்கையாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.
சொந்த காலில் நின்று என் தந்தைக்கு பெருமை சேர்ப்பேன்! வைரலாகும் வீடியோ!
மாணவி வித்யா ஸ்ரீ கல்லூரி விழாவில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசியிருக்கும் வித்யா ஸ்ரீ, “என்னுடைய லட்சியம் என்னனு சொல்லனும்னா, நான் சொந்தகால்ல நிக்கனும். என் அப்பா தவறி 4 மாசம் தான் ஆகுது. இப்போ என் சொந்தகாரங்கலாம் என்ன சொல்றாங்கனா, உனக்கு என்ன பா அப்பா இல்லனாலும், பெரியப்பா பார்த்துப்பாங்கனு சொல்றாங்க. ஆனால் என் குடும்பத்த பார்த்துக்க என்னால முடியும், இப்போ நான் தான் வேலைக்கு போய் சம்பாரிச்சு, பணம் கட்டி படிக்கிறன்.
இத என்னோட தன்னம்பிக்கையா நான் பார்க்குறன். சொல்றவங்க சொல்லிட்டே தான் இருப்பாங்க, இப்ப பேசும்போது கூட என் கண்ணுல தண்ணீர் வருது. ஆனா என் அப்பா இல்லையேனு நான் சிலநேரம் உடைஞ்சு போனாலும், அப்பா இல்லாம நான் இவ்ளோ கத்துக்கிட்டனேனு நினைக்குறன். நிச்சயம் நான் சொந்த கால்ல நிப்பன்” என்று கூறியிருந்தார். அப்பா இறந்து சில மாதங்களிலேயே, வித்யா ஸ்ரீயும் இறந்திருப்பது, வீடியோ பார்ப்பவர்களை கூட சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.