”தற்காலிகமான பணி வழங்கலாம்..” கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தற்காலிகமாகப் பணி வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜயைக் காண ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வரான விஜய், இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து, இந்த நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
போட்டித் தேர்வு மூலம் மட்டுமே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் விதிகளை மீறி வேலை வழங்குவது சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் சீனி அகமது குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு, இதுதொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு” என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கருணை அடிப்படையில் பணி வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பாக அமையும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடும் தரவில்லை; அரசுப் பணியும் வழங்கப்படவில்லை” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு தடையில்லை; இன்று வழங்கப்படும் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது” என உத்தரவிட்டனர். மேலும், அரசுப் பணி வழங்குவதற்கு எதிரான வழக்கில் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

