கோவில் நிலங்கள் காணாமல் போகவில்லை: நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

கோவில் நிலங்கள் காணாமல் போகவில்லை: நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
கோவில் நிலங்கள் காணாமல் போகவில்லை: நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏதும் காணாமல் போகவில்லை என இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு, 1985 - 87 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், 2018 - 19, 2019 - 20 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளதாகவும், காணாமல் போன மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காணாமல் போன நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் அறிக்கையை அரசு வழக்கறிஞர் அனிதா தாக்கல் செய்துள்ளார். அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், நன்செய் நிலம், தரிசு நிலம், காலியிடம், கட்டிடங்கள் அமைந்துள்ள நிலம் என வகைப்படுத்தி ஆண்டுதோறும் அரசு கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கும் எனவும், 2019 - 20 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், கட்டிடங்கள் அமைந்துள்ள நிலம் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் காணாமல் போகவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை கண்டறிய விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களுடன் இந்த நிலங்களின் விவரங்களை சேகரிக்கும்படி, அனைத்து கோவில்களின் செயல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை முடித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com