எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாரதிய பாஷா பரிஷத் என்ற இலக்கிய அமைப்பு, இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பிக்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக இந்த விருதை வழங்குவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்றும், பாரதிய பாஷா பரிஷத் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில், மே ஒன்றாம் தேதி நடைபெறும் விழாவில், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன், ஏற்கனவே சாகித்திய அகாதமி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.