எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சஞ்சாரம்’ என்ற நாவல் எழுதியதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவல்தான் ‘சஞ்சாரம்’. நாதஸ்வரக் கலையின் சிறப்பம்சங்கள், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் சாதிய சூழல் உள்ளிட்டவற்றைப் பற்றி விவரிக்கிறது இந்த நாவல்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராக கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன், தற்போது சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 1984 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பலவற்றை எழுதி வருகிறார். வார இதழ் ‘ஆனந்த விகடனி’ல் இவர் எழுதிய ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘கேள்விக்குறி’ ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்தன.
இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘அட்சரம்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார். ரஷ்ய இலக்கியங்கள் குறித்து தொடர்ச்சியாக உரைகள் நிகழ்த்தி வருகிறார்.

