கனமழை எச்சரிக்கை | நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தவிர, பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.