
தமிழகத்தில் ‘Go Back Modi’ என்று சொன்னவர்கள் ‘Come back Modi’ என்று சொல்லும் காலம் விரைவில் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த பிரமருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் என, தமிழக பாஜக சார்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்திற்கு மத்திய அரசு நல்ல திட்டங்களை கொண்டு வருவதால் அரசியல்வாதிகளுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் பின் நாளில் வருத்தப்படுவார். பாகிஸ்தான்காரர்களை ஓட ஓட விரட்டிய மோடியா, தமிழக சாலையில் பயணிக்க பயப்படுவார்? தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என ஒரு சில பேர் நம்பிக்கையுடன் சொன்னார்கள். ஆனால் வைகோ ஸ்டாலினுடன் சேர்ந்து உள்ளதால் அது நிச்சயம் நடக்காது. தமிழகத்திற்கு வந்த மோடி, விதவிதமான இராணுவ விமானங்களை பறக்க விட்டார். ஆனால் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர்கள் கருப்பு பலூனை பறக்க விட்டனர். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பாஜக தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ‘Go Back Modi’ என சொன்ன தமிழகம் விரைவில் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும்” என்று தெரிவித்தார்.