தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு: திடீர் ட்விஸ்ட்.. திருச்சியில் இல்லையா?
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அறிவித்தார். தொடர்ச்சியாக, கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில், கட்சியின் தலைவரான அவர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, அவர் நடித்துவரும் GOAT திரைபடத்தின் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் திரைபடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. திரைப்படம் வெளியானபின் அந்த மாதத்தின் இறுதியிலேயே கட்சியின் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்காக சேலம், மதுரை என சில மாவட்டங்களில் இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, கட்சி சார்பில் ஆய்வும் நடத்தப்பட்டது. 10 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என கட்சியின் தலைமை எதிர்பார்ப்பதால் அதற்கேற்றவாறு இடத்தைத் தேடிவந்தனர்.
இந்நிலையில்தான், திருச்சி பொன்மலையில் ரயில்வேக்கு சொந்தமான ஜிகார்னர் மைதானத்தில் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. கட்சியின் தரப்பில் அங்கு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. முடிவில் மாநாட்டை அங்கேயே நடத்த முடிவு செய்து, அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கடிதமும் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் மாநாடு நடத்தப்படும் தேதியை குறிப்பிட்டால் மட்டுமே அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் புதிய திருப்பமாக திருச்சி ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறாக விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அருகே விஜய் மாநாட்டுக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பு ஆதரவாளரான லயோலா மணியைத் தொடர்பு கொண்டோம். “எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.