Tamil Nadu Witnesses Political History as Vijay Rises to Power
விஜய்Pt web

1992இல் தொடங்கிய திரைப்பயணம்.. 2026இல் அரசியல் மகுடம்.. வரலாறு படைத்த விஜய்!

பெரும் பாய்ச்சலுடன், தமிழ்நாட்டு அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் விஜய்! மாற்றத்துக்கான புதிய சக்தியாகத் தன்னை முன்நிறுத்திக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறுகிறார்.
Published on

1974இல் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து, திரையுலகில் நுழையும்போது பல சவால்களைச் சந்தித்தார் விஜய். தந்தை ஒரு வெற்றிகரமான இயக்குநர் என்றாலும் விஜய்க்கு உடனடி வெற்றி கிடைத்துவிடவில்லை. ஆரம்பகாலத் திரைப்படங்களில், இவரது தோற்றத்தை சில பத்திரிகைகள் கிண்டல் செய்தன. ஆனால், அதே பத்திரிகைகள் வியந்து பக்கம் பக்கமாக எழுதும் அளவுக்குத் தனது உழைப்பால் உச்சத்தைத் தொட்டார் விஜய். 'பூவே உனக்காக' தொடங்கி இன்று வரை இவர் கட்டமைத்த பிம்பம், வெறும் திரையோடு நின்றுவிடவில்லை; அது இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதயங்களில் ஒரு குடும்ப உறுப்பினராக இவரை அமரவைத்திருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்Pt web

2009ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில், அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2013இல் 'தலைவா' பட வெளியீட்டின்போது 'டைம் டூ லீட்’ (Time to Lead) என்ற வாசகத்தால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிதான், விஜய்யின் அரசியல் விதைக்கு முதல் புள்ளியாக அமைந்தது. திரையில் தனது நடனம், மக்களில் ஒருவர் என்பது போன்ற தோற்றம், பஞ்ச் வசனங்கள் போன்றவற்றால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் தரப்பினரை விஜய் ஆட்கொண்டார். அதுதான் இவரது அரசியலுக்கான அடித்தளமாக இன்றுவரை நீடிக்கிறது.

Tamil Nadu Witnesses Political History as Vijay Rises to Power
முதல்வராகும் விஜய்.. அமைச்சர்கள் யார்யார்? வெளியானது உத்தேச பட்டியல்!

விஜய்யைவிட 20 வயது அதிகமான நடிகர்கள் இன்றும் நடித்துக்கொண்டிருக்கும்போது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை… அரசியல்தான் எல்லாம் என்று முடிவெடுத்தார் விஜய். 2024இல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். விஜய்யின் கட்சி மாநாடுகள், சாலைவலங்கள் எல்லாவற்றிலும் திரண்ட மக்கள் கூட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கட்சிகளை அதிர வைத்தன. இந்த 2026 தேர்தலில், எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகம் கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டிக் காட்டியவர் விஜய். வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமல்லாது, ஆட்சி மீதான அதிருப்தி மற்றும் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலத் தேடலுக்கு ஒரு நம்பிக்கையாகத் தன்னை முன்வைத்தார்.

விஜய்
விஜய்Pt web

இளைஞர்கள், பெண்களின் பெருந்திரள் இன்று விஜய்யை கோட்டையில் அமரவைத்திருக்கிறது. கடந்த 59 ஆண்டுகளாக மாறி மாறி இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை ஆண்டுவந்த நிலையில் மூன்றாவதாக ஒரு கட்சி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. திமுக, அதிமுகவின் வலுவான கூட்டணிகள், பெரும் வாக்கு வங்கிகள் ஆகியவற்றைத் தாண்டி எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று ஆட்டத்தில் வெற்றியைக் கண்டிருக்கிறார் விஜய். ஆம்! தமிழ்நாட்டில் விஜய் யுகம் தொடங்கிவிட்டது.

Tamil Nadu Witnesses Political History as Vijay Rises to Power
உடைந்தன தடைகள்.. நாளை பதவியேற்பு.. நேரம் குறித்த விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com