முதல்வராகும் விஜய்.. அமைச்சர்கள் யார்யார்? வெளியானது உத்தேச பட்டியல்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எண்ணிக்கையை தவெக கடந்த நிலையில், இன்று இரவு தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மற்றும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தரப்பில் இருந்து தமிழகத்தில் புதிய அரசை அமைக்க தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தவெக தரப்பில் நாளையே ஆட்சி அமைக்க கோரிய நிலையில், ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மேலும், விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தசூழலில் தான், விஜயுடன் பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் யார்யார் என்பது குறித்தான உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - ஜோசப் விஜய், பொதுப்பணித்துறை - செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த், மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா, ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன், சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் ஆகியோர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளனர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க மே-13 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

