”5,949 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை; தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்” - அர்ச்சனா பட்நாயக்
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள், வேட்புமனுத் தாக்கல், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு என தேர்தல் கொண்டாட்டங்கள் களைக்கட்டி வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பரப்புரைகள் ஓய்ந்திருக்கிறது. அடுத்த, 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார் என்றப் போட்டியில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. நடந்து முடிந்த எஸ்.ஐ.ஆர்-ன் மூலம், தமிழகத்தில் 74 லட்சத்துக்கும் அதிகாமான வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர். இந்த சூழலில் தான், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது, தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் அர்ச்சனா பட்நாயக் பேசும்போது, ”தமிழகத்தில் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள். இதுவரை, 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 1,06,408 இவிஎம் இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு அமைப்புகள், 75,064 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளது. மேலும், 5,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளன நிலையில், 83 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, 300 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்காக, 63 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 4 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 1,262 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் சமூக வலைதளங்கள் தொடர்பாக 143 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அதேபோல, வாக்குச்சாவடி மையங்கள் குறித்துப் பேசிய அவர், ”249 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள், 325 முழுமையாக பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள், 71 மாற்றுதிறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையம், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5,949 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது” எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், வாக்காளர் பல்வேறு தகல்களை தெரிந்து கொள்ள, https://votervazhikatti.tn.gov.in/ என்ற தேர்தல் வழிகாட்டி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாக்களர்களுக்கு தேவையான வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

