மேற்கு வங்க தேர்தல்.. 4 முனைப் போட்டியில் முந்தப்போவது யார்.? 152 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.!
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, நாளை (ஏப்ரல் 23) 152 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்கான முடிவுகள், மே 4-ம் தேதி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து வெளியிடப்படவிருக்கிறது. 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 3.6 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றாவுள்ளனர்.
இந்தசூழலில் தான், மேற்கு வங்கத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி இடையே 4 முனைப் போட்டி நிலவிவருகிறது. 2011 முதன்முறையாக, மேற்குவங்கத்தின் ஆட்சியை மம்தா பானர்ஜி கைப்பற்றியதன் மூலம், 34 ஆண்டுகால இடது சாரி முன்னணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். அன்றிலிருந்து இன்று வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக 3 தேர்தெடுக்கப்பட்டுள்ள மம்தா, 4-வது முறையாக முதல்வராகும் நோக்கில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், முதலில் எதிர்கட்சியாவது பிறகு ஆட்சியைப் பிடிப்பது என்ற நோக்கில் மேற்குவங்கத்தில் செயல்பட்டு வந்த பாஜக, 2011 வெறும் 4.06 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தொடர்ந்து, 2016 தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக விருக்கிறது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் என்றிருந்த அரசியல்களம் வெகுவேகமாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறியிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் மூலம், மேற்குவங்கத்தில் 91 லட்சம் வாக்களர்கள் நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், அதன் தீவிரம் சிறிதும் குறையாமல், மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
தமிழகத்தைப் போலவே, மேற்குவங்கத்தில், இத்தேர்தல் மேற்குவஙத்துக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்ற பரப்புரையை தொடர்ந்து மம்தா முன்னெடுத்து வந்தார். அதேசமயம், பாஜக நாட்டைத் துண்டாட விரும்புவதாகவும், மதம் மற்றும் சமூக அடிப்படையில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி அரசியல் லாபம் அடைய முயற்சிப்பதாகவும் சாடி வருகிறார். இவ்வாறு, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, இடதுசாரி அணியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது. அதேபோல, சிபிஎம் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியும் களம் காணவுள்ள நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முன்னெப்போதையும் உள்ள தேர்தல்களைவிட பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்தல் 2 கட்டங்களாக மட்டுமே நடைபெறவுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

