2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்
2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்web

’தமிழ்நாடு to அசாம்..’ தேர்தல் தேதி அறிவிப்பு.. எப்படி இருக்கிறது 5 மாநில அரசியல் களம்..?

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
Published on

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்துடன் சேர்ந்து கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்கள் காத்திருக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026web

இந்த 5 மாநிலங்களுக்குமான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதியும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கம் மாநிலத்துக்கான தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 24 ஆகியத் தேதிகளிலும் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தற்போது அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

தமிழ்நாடு

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இது தவிர, முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியனவும் களத்தில் உள்ளன. இதனால் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராகுல் காந்தி - முக ஸ்டாலின் இடையே விழுந்த விரிசல்
ராகுல் காந்தி - முக ஸ்டாலின் இடையே விழுந்த விரிசல்web

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றிபெற்றது. ஆனால், தற்போது நாடு முழுவதும் முன்னேறி வரும் பாஜக, இந்த முறை அதிமுகவைக் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, பீகாரில் பாஜக பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு காரணம், தொகுதிப் பங்கீட்டில் சரியான எண்ணிக்கையைப் பெற்றதுதான். அது, பாஜகவுக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இந்த தேர்தலிலும் பாஜக நிச்சயம் 50-60 தொகுதிகளை எதிர்பார்க்கும். அதைவைத்தே தமிழகத்தில் தன்னுடைய வாக்குச் சதவிகிதத்தையும், தொகுதி எண்ணிக்கையையும் உயர்த்த நினைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன்மூலம் தன் கட்சியின் பலத்தையும் அதிகரித்துக் கொள்ள நினைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்Pt web

மறுமக்கள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று முதல் தேர்தலிலேயே புகைச்சலை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்துடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில், அவர்கள் தனித்து போட்டியிடும் நிலையிலேயே உள்ளனர். ஆனால் பாஜக மேலிடம் விஜயை என்டிஏ கூட்டணிக்குள் இழுத்துவர மும்முரம் காட்டிவருகிறது. வலுவாக இருக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டுமானால் தவெக தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் பதவியும், 80 தொகுதிகளும் ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

கேரளா

2021இல் 99 இடங்களை வென்ற இடது ஜனநாயக முன்னணி (LDF), கேரளா இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியான மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 2021இல் 41 இடங்களுடன் பலவீனமடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதன் வளர்ந்து வரும் இருப்பைப் பயன்படுத்தி தன்னை ஒரு தீர்க்கமான மூன்றாவது சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. ஏற்கெனவே தற்போதைய கேரள அரசு, ஒருசில ஊழல்களால் கறைபட்டுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. அது, 2026 தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

kerala bjp extends support to renaming state to keralam
கேரள முதல்வர் பினராயி விஜயன்pt web

மேலும், பீகார் வெற்றி பாஜகவின் கேரளா பார்வையை மாற்றியுள்ளது. முக்கியமாக சிறுபான்மை மக்கள் விஷயத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். கேரளா சிறுபான்மை மக்களுக்கு பாஜக மீது தவறான பிம்பம் உள்ளது. அது தற்போது மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாகக் கொடி நாட்டியுள்ள பாஜக, அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் கேரளா தேர்தல் களமும் சூடிபிடித்துள்ளது.

மேற்கு வங்கம்

மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 215 இடங்களைக் கைப்பற்றிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் கடந்தமுறை 77 இடங்களை கைப்பற்றிய பாஜக முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது.

திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் மேற்கு வங்கத்தில், பாஜகவே வாக்குச் சதவிகிதத்தில் 2வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தமுறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் உழன்று கொண்டிருக்கிறது, பாஜக. அதற்கான வழிகளையும் சமீபகாலமாகவே தேடி வருகிறது.

அதற்கு உதாரணமாய், சமீபகாலமாக குடியேற்ற விவகாரங்கள் கோலோச்சி வருகின்றன. அதேபோல், மேற்கு வங்கத்திலும் ஊழல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரச்னைகள் நாள்தோறும் வெடித்து வருகின்றன. அதை, பாஜக பெரிதாக எடுத்துக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. அது தவிர, வெற்றிபெறுவதற்கான பல வழிகளையும் அது தேடும் எனச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில், தென் மாநிலங்களைவிட, பாஜகவின் முக்கிய குறியாக மேற்கு வங்கம் மாறியுள்ளது.

புதுச்சேரி

2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி அரசியல் களமும் பரபரப்பான சூழலில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கடந்த மாதமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துவிட்டார். இருந்தபோதிலும் என்டிஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ப்பதில் குழப்பம் நீடித்துவருகிறது.

கடந்த, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த சூழலில், இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் முன்பு போட்டியிட்ட 16 இடங்களிலேயே போட்டியிடும் முடிவில் என்.ஆர். காங்கிரஸ் இருக்கிறது.

மறுபுறம் கூட்டணிக்குள் வேறு கட்சிகளை சேர்க்கும் முடிவுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் காங்கிரஸ், திமுக இடையே யார் பெரிய கட்சி என்ற மோதல் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் தொகுதிகளை காங்கிரஸ் குறைத்துக்கொண்டது போல, புதுச்சேரியில் திமுக குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

அசாம்

126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் தக்கவைக்கும் நோக்கில் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 64 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்க வேண்டும். 2.5 கோடி வாக்களர்களை கொண்ட அசாமில் கடந்த 2021 ஆம் ஆண்டுத் தேர்தல் பாஜக 60 இடங்களை கைப்பற்றியிருந்தது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது. காங்கிரசிற்கு கடந்த தேர்தலில் 29 இடங்கள் மட்டுமே கிடத்திருந்தன. இத்தேர்தலில் பாஜக வென்றால், தொடர்ச்சியாக 3 வது முறை அசாமில் ஆட்சி அமைக்கும்.

அசாம் சட்டப்பேரவை
அசாம் சட்டப்பேரவைPt web

அசாமில் சமீபத்தில் தொகுதி வரையறை நடைபெற்றிருந்த நிலையில், நடைபெறும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் தலைமையிலான அசாம் ஒருங்கிணைந்த முன்னணி போராடி வருகிறது. இக்கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகள், அசாம் ஜாதிய பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்குமா.? அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி.. வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை.. முழு விவரம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com