நாசாவிற்கு சென்ற தமிழக மாணவர் உயிரிழப்பு.. உடலை மீட்டுதர முதலமைச்சரிடம் வேண்டுகோள்
குவைத்தில் உள்ள இந்தியன் சென்ட்ரல் பள்ளியை சேர்ந்த 60 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறு பேருடன், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகளை பார்க்க சென்றிருந்தனர். இக்குழுவினர் ஆர்லாண்டோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி, நீச்சல் குளத்தில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த பிரஜோப் ஜெபாஸ் என்ற மாணவர் நீரில்
மூழ்கியதாக கூறப்படுகிறது.
பின் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் கிடைத்ததும் குவைத்தில் இருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு விரைந்து சென்ற மாணவனின் பெற்றோர், மாணவனை உடன் இருந்து பார்த்து வந்தனர். எனினும், மாணவன் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கவேண்டிய ஆசிரியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
13 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெபாஸ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிக்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஜெபாஸின் உடலை மீட்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனுக்கு பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.