1920 to 2023 : நூற்றாண்டை கடந்து முன்னோடியாக திகழும் மாணவர்களுக்கான உணவுத் திட்டம்; வரலாற்று பார்வை!

தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இத்திட்டத்தினை தொடங்கியுள்ளது. காலை உணவுத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள தெலுங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் ராயபுரத்தில் உள்ள உணவுக் கூடங்களில் பார்வையிட்டனர்.
Nutrient meal
Nutrient mealpt web

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போது கூட பல இடங்களில் குழந்தைகள் போதிய சத்தாண உணவுகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சிகளை கொடுக்கின்றன.

இருந்தபோதும் தமிழ்நாட்டில் இது போன்ற பிரச்சனைகள் அதிகளவில் உருவாகமல் இருப்பதற்கான காரணம், இதற்கான விதை 100 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. பொதுவாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமலும், சென்ற மாணவர்கள் இடை நின்றதற்கும் மிக முக்கியமான காரணமாக இருந்தது மதிய உணவு பிரச்னைதான். குழந்தைகள் ஒரு வேளை உணவையாவது நன்றாக உண்ணட்டும் என தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தாய்மார்கள் பலர்.

1920 செப்டம்பர் 16. சர்.பிட்டி தியாகராயர் தலைமையில் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதனை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இத்திட்டம் அருகில் உள்ள சில பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

1923ம் ஆண்டு வாக்கில் மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி, மதிய உணவுத்திட்டத்தை சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியது

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜரால் 1957ஆம் ஆண்டில் இத்திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டது. முதலமைச்சராக எம்.ஜி.ஆர். பொறுப்பேற்ற பின் 1982 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1989 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்த சத்துணவுத் திட்டத்தில் 2 வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.

1998 ஆம் ஆண்டுகளில் வாரத்திற்கு ஒரு முட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.

2006 ஆம் ஆண்டுகளில் திமுக அரசு வாரத்திற்கு 2 முட்டையும் 2007 ஆம் ஆண்டுகளில் வாரத்திற்கு 3 முட்டையும் 2008 ஆம் ஆண்டு வாரம் 5 முட்டையும் இத்திட்டத்தில் வழங்கப்பட்டது. பின்னர் கலவை சாதமும் அறிமுகப்படுத்தபட்டது.

தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக இத்திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இத்திட்டத்தினை தொடங்கியுள்ளது. இன்று கூட காலை உணவுத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள தெலுங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் ராயபுரத்தில் உள்ள உணவுக் கூடங்களில் பார்வையிட்டனர்.

மதிய உணவிற்காகவே பள்ளிகளுக்கு சென்று இன்று மிக உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் பலரை நாம் பார்க்கலாம். பலரும் இதை பெருமையாக சொன்னதை கேட்டிருப்போம். தனிநபர் வருமானம் வளர்ந்துள்ளது என்றும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என பேசும் சூழலிலும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உயரத்திற்கு ஏற்ற எடையோ, எடைக்கு ஏற்ற உயரமோ இல்லாமலே இருப்பதாகவும் ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நிகழ்வது இப்படி இருக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர, அடிப்படை வசதிகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்கலாமே தவிர உணவு வழங்கப்படுவதை விமர்சிப்பது நியாயமில்லாத ஒன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com