விலை இல்லா சிலிண்டர்கள்.. யார் யாரெல்லாம் பயன்பெறுவார்கள்? முதல்வர் கூறியது என்ன? விவரம்
மகளிர் வெற்றி பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரண, புறநகர், மலைப் பகுதிப் பேருந்துகளிலும் பெண்கள் மற்றும் திருநர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையிலோ எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டம் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு கட்டணமில்லா சிலிண்டர்கள் 6 வழங்கப்படும், மகளிர் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் போன்ற வாக்குறுதிகளை தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார். பெண்களை கவரும் வகையில் அமைந்த இந்த வாக்குறுதிகள், விஜயின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், இதில் இரண்டு திட்டங்கள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார். அதாவது, 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் இன்று சட்டபேரவையில் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர் விஜய், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அந்த நெருக்கடியை சரிசெய்யும் விதமாக, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தால் ஒரு கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று கூறிய முதலமைச்சர், இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் 4 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து மகளிர் வெற்றி பயண திட்டத்தின் விரிவாக்கம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்ட முதலமைச்சர், மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் ஆகிய அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், இந்த மகளிர் வெற்றிப் பயணத் திட்டம் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று கூறிய முதலமைச்சர், இந்த திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகளோ இல்லை என்று கூறினார். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின்கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று தனது அறிவிப்பில் முதலமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

