முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்PT

‘சாதியால், மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது’ - முதல்வர் பேச்சு

சாதியால், மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியாது என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற சாதனை மலரையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இரண்டு ஆண்டுகளாக ஏழை மக்களின் நலன் காக்கும் குடியிருப்பாக மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா?; எடுத்துக்கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா? என்று நானே என்னை கேட்டுக்கொண்டபோது, என்னுடைய மனதிற்கு தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர்தான். சனாதனத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ் மக்களை, திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரையில் ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமுதாயமாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார்.

சுயமரியாதை பெற்ற இனம். தனக்கான உரிமைகளை பெற்றாக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு எளிய மக்களுக்கான இயக்கத்தை உருவாக்கி ஆட்சி அமைத்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா. ஆட்சி என்பதற்கான இலக்கணம் என்ன என்பதை தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்து காட்டிய சாதனைகள், திட்டங்கள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டியவர் கலைஞர்.

மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதியது அல்ல. சிறுவனாக, இளைஞனாக இருந்தபோதே திராவிட கழகத்திற்கு என்னை ஒப்படைத்துவிட்டு, கலைஞர் உத்தரவை மீறாமல் பணியாற்றி வந்துள்ளேன். எதையும் தாங்க வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. இதையும் தாங்க வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் கலைஞர்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதலமைச்சர், இது மக்கள் தந்த பொறுப்பு. மக்களுக்காக பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை; என்னால் முடிந்த அளவிற்கு பணியாற்றுகிறேன்; ஓய்வின்றி பணியாற்றுகிறேன்; என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன்; அதற்கான பயனை மக்களின் முகங்களில் பார்க்கிறேன்; மக்கள் காட்டும் அன்பில் கரைகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருக்குறள் கூறுகிறது, எல்லோருக்கும் எல்லாம் என கூறுவது திராவிட மாடல். அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாக புரியும், நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளோடு செயல்படுகிறேன். சொல்லாதையும் செய்வதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்ன என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அல்ல. ஜாதியால், மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது.

மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது கடந்த 2 ஆண்டு காலமாக, ஏழை மக்களின் நலன்காக்கும் குடியிருப்பாக மாறி உள்ளது.

இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் அல்ல, அன்பு.
இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல, ஜனநாயகம்.
இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரம் அல்ல, எளிமை.
இந்த ஆட்சியின் முகம் என்பது சர்வாதிகாரம் அல்ல, சமத்துவம்.
இந்த ஆட்சியின் முகம் என்பது சனாதானம் அல்ல, சமூக நீதி.

இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எட்டுகோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தின் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது. உங்கள் இல்லத்தில் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டப்படி ஊட்ட உணவை வழங்குகிறது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்கு காலை நேரத்தில் உணவு தருகிறது இந்த அரசு.

உங்கள் இல்லத்தில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் ஒரு மாணவி இருந்தால், அவருக்கு ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வழங்குகிறது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் பேருந்துகளில் கட்டணமில்லாத வசதியை ஏற்பாடு செய்து தந்துள்ளது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் ஒரு கல்லூரி மாணவர் இருந்தால் அவரை அனைத்து விதங்களிலும் தகுதிப்படுத்துவதற்கு, 'நான் முதல்வன்' திட்டம் மூலம் வழிகாட்டுகிறது இந்த அரசு.

உங்கள் இல்லத்தில் ஒரு விவசாயி இருந்தால், இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளது இந்த அரசு. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக கடனுதவியை வழங்கி இருக்கிறது இந்த அரசு. மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித் தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்த அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு இந்த ஆட்சி வந்ததும் 1000 ரூபாய் மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சி தான் எனது மகிழ்ச்சி.

தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்தக் கருவியை வாங்குவதற்கு பணமில்லை. அந்த சிறுவனுக்கு நானே காதொலி கருவியை பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சப்தங்களைக் கேட்டு சஜீத் சிரிப்பதைப் பார்க்கும் போதுதான் எனக்கு மகிழ்ச்சி. டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா ஆகியோரின் அன்பு மகள் தான் டானியா. இப்போது அவருக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முகச்சிதைவு நோய் காரணமாக அவரது முகத் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளதால், உடன் படிக்கும் மாணவிகளால் கூட அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற செய்தி கிடைத்ததும் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகிறார். அந்தக் குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி.

மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வர வைப்பது சாதாரணமான செயல் அல்ல. மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. முகம் மலர்வது என்பது இயற்கையான செயல். அத்தகைய மலர்ச்சியை லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் வெளிப்பட வைத்ததுதான் இந்த அரசின் சாதனை ஆகும். திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்ற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை செய்தவை என்ன? அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன?

அரசு கஜானாவின் நிலைமை என்ன? அதையெல்லாம் மாற்றி இருண்ட தமிழகத்தில் விடியலை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழ்நாட்டை உருவாக்கி விடுவோம் என்ற நம்பிக்கை அதிகமாகியுள்ளது. உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com